Published : 16 Oct 2019 03:30 PM
Last Updated : 16 Oct 2019 03:30 PM

அரசுப் பள்ளி மாணவர்களைப் போல் சீருடை; 6 ஆண்டுகளாகத் தொடரும் தலைமை ஆசிரியை

ஓர் ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள இடைவெளிகளில் முக்கியமானவை வயது, பேச்சு, உடை. ஆசிரியர்கள் பலர், தங்கள் வயதை மறந்து குழந்தைகளோடு குழந்தையாய் மாறி, பேசி, சிரித்துக் கற்பிக்கின்றனர். அதேபோல உடையில் பேதத்தைப் போக்க நினைத்து, மாணவர்களின் சீருடையைப் போல் தானும் சீருடை அணிந்து வருகிறார் அன்பாசிரியர் வாசுகி.

கடந்த 11 ஆண்டுகளாக, பவானி ஒன்றியத்தில் உள்ள கே.ராமநாதபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் அன்பாசிரியர் வாசுகி. ஆரம்பத்தில் எல்லோரையும் போல வண்ண சேலைகளில் வந்தவர், சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னால் பள்ளி மாணவர்களின் சீருடைக்கு மாறினார்.

இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் அவர் விரிவாகவே பேசுகிறார்.

''அரசுப் பள்ளிகளின் விலையில்லா சீருடைகள்தான் மாணவர்களின் பிரதான ஆடைகள். அதுவும் கிராமத்துப் பள்ளிகளில் கேட்கவே வேண்டாம். ஆரம்பகாலத்தில் இருந்தே சத்துணவும் சீருடையும் எனக்கு மிகவும் ஈர்ப்பைத் தரும் விஷயம். கடந்த காலங்களில் வேலை பார்த்த பள்ளிகளில், வாரம் ஒரு முறை ஆசிரியர்கள் இணைந்து சீருடை அணிவோம்.

8 வருடங்களுக்கு முன்னால், குழந்தைகளின் உடையிலேயே வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. ஆனால் அது எப்போதுமே சாத்தியப்படுமா? என்ற யோசனையில் விட்டுவிட்டேன். இரண்டு ஆண்டுகள் கழித்து சீருடையை உடுத்த முடிவு செய்தேன்.

அப்போது பள்ளிகளில் சிவப்பு, சந்தன வண்ணச் சீருடை அமலில் இருந்தது. அதைத் தைத்து பள்ளிக்கு உடுத்தி வந்தேன். என்னைப் பார்த்த மாணவர்கள், 'ஐ! ரொம்ப நல்லாயிருக்கு டீச்சர்' என்று கூறி மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். 'டீச்சரும் நம்மளை மாதிரியே யூனிஃபார்ம் போட்டுட்டு வர்றாங்க!' என்று அந்த நாள் முழுக்கப் பேசிக்கொண்டிருந்தனர்.

சில நாட்களில் கிராமம் முழுவதும் நான் சீருடை அணிந்து வருவது தெரிய ஆரம்பித்தது. பெற்றோர் மிகவும் வியப்பை அடைந்தனர். 'எளிமையா, ஆடம்பரம் இல்லாமல் இருக்கறீங்க டீச்சர்' என்று ஆச்சரியப்பட்டனர்'' என்று ஆசிரியர் வாசுகி சிரிக்கிறார்.

பள்ளி வேலை நாட்களில் திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போதும் சீருடையிலேயே செல்கிறார் ஆசிரியர் வாசுகி. ''துறை ரீதியான சந்திப்புகள், உறவினர்கள், நட்புகளில் சுப காரியங்கள் அன்றும் சீருடைதான் அணிந்து செல்வேன். வித்தியாசத்தை உணர்ந்தாலும் மற்றவர்கள் எதுவும் சொன்னதில்லை.

விடுமுறை நாட்களில் மட்டுமே மற்ற உடைகளை அணிகிறேன். குழந்தைகளின் மனநிலையுடன் ஒத்த சூழலில் இயங்க சீருடை முறை, ஏதுவாக இருக்கிறது. இதனாலேயே சுமார் 6 ஆண்டுகளாக அரசு மாற்றும் விதத்துக்கு ஏற்ப நானும் சீருடைகளை மாற்றிக் கொள்கிறேன்.

வீட்டில் கணவரும் ஆசிரியர் என்பதால் என்னை எப்போதும் ஊக்கப்படுத்துவார். இதுவரை, அலுவல் ரீதியாக எவ்விதக் கேள்வியும் எழவில்லை. இரண்டு செட் சீருடைகளை, மாற்றி மாற்றித் துவைத்துப் போட்டுக்கொள்வேன்.

எனக்கு இன்னும் 8 ஆண்டுகள் பணி இருக்கிறது. அதுவரை இது அப்படியே தொடர வேண்டும் என்பதே என் ஆசை'' என்று உறுதிபடச் சொல்கிறார் ஆசிரியர் வாசுகி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x