

சென்னை
தபால்தலை சேகரிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
தேசிய அஞ்சலக வாரம் அக்டோபர் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அகில இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 12-ம் தேதியன்று சிறப்பு தபால்தலை சேகரிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
சிறப்பு விநாடி வினா
சிறப்பு தபால்தலை சேகரிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் உள்ள சிறப்பு தபால்தலை மையத்தின் சார்பாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இடையிலான சிறப்பு விநாடி வினா போட்டி நடைபெற்றது.
இதில் சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.
சென்னை தீவுத்திடலில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆஷிஷ்குமார்
முதல் பரிசையும், முகப்பேர் டிஏவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர் எஸ்.நிதிலன் 2-ம் பரிசையும், பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள கே.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர் கவுதம் சிவா 3-ம் பரிசையும் வென்றனர். அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் தலைமை அஞ்சலக அதிகாரி வீ.கனகராஜன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
அனைவருக்கும் சான்றிதழ்கள்
வினாடி-வினா போட்டி போட்டியில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சென்னை தபால்தலை சேகரிப்பாளர்கள் சங்கத்தின் தென்னிந்திய செயலாளர் மகேஷ் பாரீக், தபால்தலை சேகரிப்பாளர் ப.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு தபால்தலைகளை இலவசமாக வழங்கினர்.