Published : 16 Oct 2019 11:47 AM
Last Updated : 16 Oct 2019 11:47 AM

பெண் கல்வி குறித்து  பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு: பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில்  சுவாரசியம்

பொள்ளாச்சி

பெத்தநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் கல்வி குறித்து பொம்மலாட்டம் நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பெத்தநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் தேசிய பசுமைப் படை சார்பில், ‘திறம்படக் கேள்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லோகநாதன் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, அழிந்து வரும் பாரம்பரிய கலையான பொம்மலாட்டநிகழ்வு நடைபெற்றது. ஈரோட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் தாமஸ் ஆண்டனி பெண் கல்வி குறித்து பொம்மலாட்டம் வழியாக பேசியது, மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஒன்பதாம் வகுப்பில் இரண்டாம் பருவத்தில் ‘கசடற மொழிதல்' எனும் இயலும், எட்டாம் வகுப்பில் ‘கல்வி கரையில' எனும் இயலும், ஏழாம் வகுப்பில் ‘ஓதுவது ஒழியேல்' எனும் இயலும் கல்வி குறித்தும், பெண் கல்வி குறித்தும் வலியுறுத்தும் பாடங்கள் இடம்பெற்றுள்ளன. பொம்மலாட்ட நிகழ்வு மூலமாக இவை நடத்தி காண்பிக்கப்பட்டது. இது பாரம்பரிய கலைகளுக்கு புத்துணர்வு ஊட்டும் வகையிலும், கற்றலை எளிதாக்கும் வகையிலும், மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையிலும் அமைந்து இருந்தது.

அதைத்தொடர்ந்து, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் அவரின் வாழ்க்கை வரலாற்றைக் அறியும் வகையில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான 100 முக்கிய நிகழ்வுகள் அரிதான புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டன. இது, தங்களுக்கு காந்தியின் வாழ்க்கை வரலாற்றை படிப்பது போல இருந்ததாக அவற்றை பார்வையிட்ட மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியை சேவாலயம் சேவை அமைப்புமுன்னின்று இலவசமாக நடத்தியது. நிறைவாக, கவிஞர் அம்சப்ரியா எழுதிய ‘வகுப்பறையே ஒரு வரம் தான்’ எனும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்புத்தகத்தை மாணவி தமிழ்செல்வி வெளியிட, பொம்மலாட்ட கலைஞர் தாமஸ் ஆண்டனி பெற்றுக் கொண்டார். முடிவில், பள்ளி தமிழா சிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x