

புதுடெல்லி
உலகக் கோப்பை போன்ற ஐசிசி போட்டிகளில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமநிலையில் முடிந்தால் சூப்பர் ஓவர் வழங்கப்படுகிறது. இந்த சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சம அளவில் ரன்களை எடுத்தால், ஒட்டுமொத்த ஆட்டத்திலும் எந்த அணி அதிக பவுண்டரிகளை அடித்ததோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், நியூஸிலாந்து -இங்கிலாந்து அணிகள் சம அளவில் ரன்களைக் குவித்தன. இந்நிலையில் இப்போட்டியில் அதிக பவுண்டரிகளை விளாசியதால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இது பெரிய அளவில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விதியை தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாற்றியுள்ளது. புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்படி ஐசிசி தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் சமநிலையில் முடிந்தால், சூப்பர் ஓவர் வழங்கப்படும்.
இதுவும் சமநிலையில் முடிந்தால் மற்றொரு சூப்பர் ஓவர் வழங்கப்படும். இப்படி ஆட்டத்தின் முடிவு தெரியும் வரை சூப்பர் ஓவர் தொடரும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.