Published : 15 Oct 2019 07:04 AM
Last Updated : 15 Oct 2019 07:04 AM

பொருளாதாரத் துறையில் சிறந்த இந்தியர் உள்பட மூவருக்கு நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்

பொருளாதாரத் துறையில் 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசை இந்தியர் உட்பட 3 பேர் பெறவுள்ளனர். மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. கடந்த 1901-ம் ஆண்டு முதல் இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 2019-ம் ஆண்டு பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று அறிவிக்கப்பட்டது. பொருளாதார நிபுணர்கள் அபிஜித் விநாயக் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரெமர் ஆகியோர் இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததற்காக இந்த 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நோபல் பரிசு தேர்வுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள் நடத்திய ஆராய்ச்சி உலகளாவிய வறுமையை எதிர்த்துப் போராடு
வதற்கும், அதை விரட்டுவதற்கும் நமது திறனை கணிசமாக மேம்படுத்தியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக அவர்களின் புதிய சோதனை அடிப்படையிலான அணுகுமுறை வளர்ச்சி பொருளாதாரத்தை மாற்றியுள்ளது. இது இப்போது வளர்ந்து வரும் ஆராய்ச்சித் துறையாக மாறிள்ளது" என்று பாராட்டுத் தெரிவித்துள்ளது. நோபல் பரிசு வென்ற நிபுணர்களில் ஒருவரான அபிஜித் பானர்ஜி, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்தவர். பானர்ஜி மற்றும் எஸ்தர் டூஃப்லோ ஆகியோர் கணவன் - மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

58 வயதாகும் அபிஜித் பானர்ஜி கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் படித்தவர். அதன்பிறகு அவர் பிரிட்டனில் குடியேறினார். பின்னர் 1988-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தார். தற்போது அவர் அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொருளாதாரத் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x