Published : 14 Oct 2019 11:29 AM
Last Updated : 14 Oct 2019 11:29 AM

இந்திய கிரிக்கெட் வரலாறு

வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் வளங்களை இங்கிலாந்துக்கு கடத்திச் செல்ல எந்த கப்பல்கள் உதவியதோ, அதே கப்பல்தான் இங்கிலாந்தின் கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் காலூன்றவும் உதவியது. 1721-ம் ஆண்டு குஜராத்தின் கட்ச் பகுதிக்கு வந்த கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல் ஒன்று அங்குள்ள துறைமுகத்
திலேயே 15 நாட்கள் தங்கியிருந்தது. இக்காலத்தில் கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு போர் அடிக்காமல் இருக்கவும், அவர்கள் சுறுசுறுப்பாக இயங்கவும் எதையாவது செய்தாக வேண்டுமே என்று கப்பலின் கேப்டன் யோசித்திருக்கிறார். அப்போதுதான் மாலுமிகளை இரு பிரிவுகளாக பிரித்து, அவர்களிடையே கிரிக்கெட் போட்டியை நடத்தும் எண்ணம் அவருக்கு தோன்றியுள்ளது.

அவர்கள் கிரிக்கெட் ஆடியதைப் பார்த்த அப்பகுதி இந்தியர்களுக்கும் கிரிக்கெட் பிடித்துப்போய் உள்ளது. இந்தியர்களுக்கு பொதுவாகவே வேடிக்கை பார்க்கும் பழக்கம் அதிகம் என்பதால், ஆங்கிலேயர்கள் கிரிக்கெட் ஆடும் இடங்களுக்கெல்லாம் சென்று வேடிக்கை பார்த்தனர். முட்செடிகளை வெட்டி மைதானம் அமைக்க உதவினர். பிட்ச்சின் மீது கனமான உருளைகளை இழுத்துச் சென்று அதைச் சீர்படுத்திக் கொடுத்தனர்.

இந்த உதவிகளுக்கு பிரதிபலனாக வெள்ளையர்களும் இந்திய இளைஞர்களுக்கு கிரிக்கெட் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தனர். இப்படியாக இந்தியாவில் வெள்ளையர்களின் ஆட்சி எங்கெல்லாம் விரிவடைந்ததோ, அங்கெல்லாம் கிரிக்கெட்டும் தடம் பதித்தது. ஆரம்பத்தில் வெள்ளையர்கள் மட்டுமே ஆடிவந்த இந்த ஆட்டத்தை பிற்காலத்தில் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த இந்திய இளைஞர்களும் ஆடத் தொடங்கினர். அப்படி கிரிக்கெட் ஆடிய முதல் இந்தியர்கள் என்ற பெருமை பார்சி இனத்தவர்களையே சேரும்.

1850-ம் ஆண்டில் பார்ஸி இனத்தவர்கள் சிலர் ஒன்றுகூடி ‘யங் சொராஸ்டியான் கிரிக்கெட் கிளப்’ என்ற அமைப்பை தொடங்கினர். இதைத்தொடர்ந்து பல்வேறு மதத்தை சேர்ந்த இளைஞர்களும் தங்களுக்கென்று கிரிக்கெட் கிளப்களைத் தொடங்கியுள்ளனர்.

இந்த கிளப்புகள் தங்களுக்குள்ளும், இங்கிலாந்து கிளப்களுடனும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்த ஆட்டம் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. இந்த நேரத்தில் உள்ளூரிலேயே கிரிக்கெட் ஆடுவதைவிட அதன் பிறப்பிடமான இங்கிலாந்துக்கே சென்று கிரிக்கெட் ஆடவேண்டும் என்ற ஆசை பார்ஸி கிரிக்கெட் கிளப்பைச் சேர்ந்த சில இளைஞர்களின் மனதில் எழுந்தது. இங்கிலாந்து பயணத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.


- பி.எம். சுதிர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x