Published : 14 Oct 2019 10:30 AM
Last Updated : 14 Oct 2019 10:30 AM

மாணவர்களை கவர ரயிலில் ஒரு பள்ளி: மத்திய பிரதேச மாநிலத்தில் அசத்தல்

போபால்

மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க நிர்வாகமும், அவர்களை தேர்ச்சி பெற வைத்து, நல்லொழுக்கத்துடன் வெளியே அனுப்பவேண்டும் என்று ஆசிரியர்களும் கடுமையாக உழைத்து வருகின்றனர். அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் டிண்டோரி மாவட்டத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி புதுமையான முறையை கையாண்டு, பள்ளிக்கு மாணவர்களை ஈர்த்து வருகிறது.

பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் டிண்டோரி மிகவும்பின் தங்கிய மாவட்டமாகும். இப்பகுதியில், ரயில் போக்கு வரத்து மிக அரிதாகவே இருக்கிறது. இதனால், குழந்தைகள் ரயிலை மிகவும் அதிசயமாகவே பார்க்கின்றனர். இதை உணர்ந்த காஜ்ரி பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சந்தோஷ் யுக்கே, பள்ளியையே ரயிலை போல உருவாக்க முடிவு செய்தார்.

அதன்படி, பள்ளி வகுப்பறைகளை ரயில்பெட்டிகள் போன்றும், ரயில் இருக்கைகள் போலவும் ஊதா, மஞ்சள் வண்ணமும் பூசி வடிவமைத்தார். இதற்கு “எஜுகேஷன் எக்ஸ்பிரஸ் எம்எஸ் காஜ்ரி” என்று பெயர் சூட்டினார். மதிய உணவு சாப்பிடும் அறைக்கு “அன்ன பூர்ணா” என்றும் பெயர் வைத்தார். அதேபோல், பள்ளி முகப்பு கட்டிடங்களை அச்சு அசல் ரயில் இன்ஜின் போலவே வடிவமைத்தார்.

இதற்கான செலவுகளுக்கு, அப்பள்ளியின் ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தின் ஒருபகுதியை கொடுத்தனர். மேலும், அப்பகுதி மக்கள் ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள். தற்போது, இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை சற்று அதிகமாகி உள்ளது. அப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அஜய், “எங்கள் பள்ளி ரயிலில் போய் பாடம் படிக்கிற மாதிரியே இருக்கு. இதனால் நான் லீவே போடாமல் பள்ளிக்கு வருகிறேன்” என்று மகிழ்ச்சியாக கூறுகிறான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x