

போபால்
கடந்த 23 ஆண்டுகளாக, சமஸ்கிருத பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சியை கொடுத்து வரும் ஒருவருக்கு மத்திய பிரதேச முதல்வரின் சிறப்பு விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டது. இதில் என்ன பெருமை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அதுதான் பெருமையே.. 100 சதவீதம் தேர்ச்சி கொடுக்க அவர் ஒன்றும் ஆசிரியர் இல்லை. பள்ளியின் கடைநிலை ஊழியர்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே கிரோடாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 23 ஆண்டுகளாக பியூனாக வேலை பார்த்து வருபவர் வாசுதேவ் பஞ்சால் (53). இவர்தான், 23 ஆண்டுகளாக அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சமஸ்கிருத பாடம் எடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாது, 23 ஆண்டுகளாக தன்னிடம் படித்த மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெறவும் வைத்துள்ளார்.
இதுகுறித்து வாசுதேவ் பஞ்சால் கூறும்போது, ‘‘நான் குழந்தையாக இருக்கும்போது சமஸ்கிருதம் கற்றுக் கொண்டேன். எனது குரு எனக்கு சொல்லி கொடுத்ததை பிறருக்கு சொல்லிக் கொடுத்தேன். அப்போது, எனது பள்ளியில் படித்த சில மாணவர்கள், தங்களுக்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்குமாறு கேட்டார்கள். அதன்படி மாணவர்
களுக்கு சம்ஸ்கிருதம் சொல்லி கொடுத்தேன்.
அதன் பரிசாக, முதல்வர் சிறப்பு விருது கிடைத்துள்ளது” என்றார் எந்த ஒரு ஆர்பாட்டமும் இல்லாமல். தினமும் காலையிலேயே பள்ளிக்கு வாசுதேவ் வந்து விடுவார். அதன்பின்னர், பள்ளியை கழுவி சுத்தம் செய்து, அங்கு இருக்கும் பொருட்களை சுத்தம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, 2 பாட வேளைகள் சமஸ்கிருதம் எடுப்பார். அப்பகுதியில், 40 கிலோ மீட்டர் சுற்றளவில் எந்த பள்ளியிலும் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவதில்லை. வாசுதேவ் சமஸ்கிருதம் பாடம் எடுப்பதாலேயே, அப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகமாகி வருகிறது.