Published : 14 Oct 2019 08:45 AM
Last Updated : 14 Oct 2019 08:45 AM

பெரியாறு அணை நீர் திறப்பு தினம்: பென்னிகுவிக் சிலைக்கு பள்ளி மாணவர்கள் மரியாதை

கூடலூர்

பெரியாறு அணையின் 125-வது ஆண்டு நீர் திறப்பு தினத்தையொட்டி பென்னிகுவிக் சிலைக்கு பள்ளி மாணவ-மாணவிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தில் உருவாகி கேரளா வில் மேற்கு நோக்கி ஓடும் முல்லையாற்றில் அணை கட்டி வைகை நதியில் இணைக்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. இதற்காக 1886-ம் ஆண்டு அக்.29-ல் ரூ.43 லட்சம் மதிப்பில் அணை கட்ட திட்டமிடப்பட்டது.

முல்லை பெரியாறு அணை

பென்னிகுவிக் தலைமையில் பிரிட்டிஷ் ராணுவத்தின் கட்டுமானத் துறை அணை கட்டும் பணியை மேற்கொண்டது. முல்லை பெரியாறு அணை 1895-ல் கட்டி முடிக்கப்பட்டது. சென்னை மாகாண கவர்னர் வென்லாக் பெரியாறு அணை தண்ணீரை 1895 அக்டோபர் 10-ல் தமிழகப் பகுதிக்கு திறந்து வைத்தார். பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு முதன் முதலாக தண்ணீர் திறக்கப்பட்ட நாளான அக்டோபர் 10-ம் நாளை தென் மாவட்டங்களில் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை 125-ம் ஆண்டை முன்னிட்டு லோயர்கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணி மண்டபத்துக்கு கம்பம் நாலந்தா பள்ளி மாணவர்கள் வந்திருந்தனர். தாளாளர் விஸ்வநாதன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. பென்னிகுவிக் தன் சொந்தப் பணத்தில் அணை கட்டிய விவரம், அதற்காக அவர் அனுபவித்த சிரமங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

கல்லூரி மாணவிகள்

இதே போல்கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மாணவியர் மரியாதை செலுத்தினர். கல்லூரி செயலர் கம்பம் என். ராமகிருஷ்ணன், இணைச்செயலர் வசந்தன், முதல்வர் ரேணுகா மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். பெரியாறு அணையின் வரலாறு, 999 ஆண்டுக்கான ஒப்பந்தம், அணையின் சிறப்புகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.பென்னிகுயிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கம்பம் நாலந்தா பள்ளியின் தாளாளர் விஸ்வநாதன் மற்றும் மாணவ, மாணவிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x