காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட 4 அரசியல் தலைவர்கள் விடுவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அரசியலமைப்பு 370-வது பிரிவை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொலைத்தொடர்பு இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியதும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அமைதி நிலவ தொடங்கியதால் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை படிப்படியாக விடுவிக்கும் நடவடிக்கையை காஷ்மீர் அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், 4 முக்கிய அரசியல் தலைவர்களை காஷ்மீர் அரசு நேற்று விடுதலை செய்துள்ளது. பிரபல ஷியா முஸ்லிம் தலைவரும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் முக்கிய தலைவருமான அபித் ஹுசேன் அன்சாரி விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் ஷாடிபால் பகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஷியா முஸ்லிம் மதத் தலைவர் இம்ரான் அன்சாரியின் உறவினர். இம்ரான் கடந்த மாதமே விடுதலை செய்யப்பட்டார்.

இதுபோலவே, தேசிய மாநாட்டு கட்சி பிரமுகர் நூர் முகமது, மக்கள் ஜனநாயக கட்சி செய்தித் தொடர்பாளர் யாவர் தில்வார் மீர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோஹிப் லோன் ஆகியோரும் இன்று வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

காஷ்மீர் அரசு முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இதுபோல் மற்ற தலைவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்று காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in