Published : 09 Oct 2019 04:53 PM
Last Updated : 09 Oct 2019 04:53 PM

கிராமத்துப் பள்ளியில் இவ்வளவு பெரிய நூலகமா?- மலைப்பை ஊட்டும் மன்னம்பாடி அரசுப்பள்ளி

கடலூர்

பாடநூல்களைத் தவிர்த்து மற்ற நூல்களைப் படிப்பதில் பள்ளிக் குழந்தைகளுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். ஆனால் அதற்கான வாய்ப்புதான் குறைவு. அதுவும் பெரும்பாலான கிராமப்புற மாணவர்களுக்கு அத்தகைய வாய்ப்பே கிடைப்பதில்லை.

பள்ளிகளில் நூலகம் இருக்கும், நூல்களும் இருக்கும். ஆனால் அவற்றைக் குழந்தைகளுக்குப் படிக்க வழங்குவது ஆசிரியர்களுக்குக் கூடுதல் சுமை என்ற எண்ணம் உள்ளதால் பெரும்பாலானோர் அதில், ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டத்திலுள்ள மன்னம்பாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஏராளமான நூல்களைப் படித்து வருகின்றனர். எப்படி அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது?

இதுகுறித்து விரிவாகவே பேசுகிறார் பள்ளியின் கணித ஆசிரியர் புகழேந்தி.

பள்ளி நூலகம் உருவானது எப்படி?

''தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட பள்ளி எங்களுடையது என்பதால் ஒவ்வோர் ஆண்டும் பள்ளி நூலகத்திற்கு நூல்கள் வாங்க 7,500 ரூபாய் தருவார்கள். அந்தத் தொகையில் நல்ல நூல்களைத் தேர்வு செய்து தலைமை ஆசிரியர் ஒத்துழைப்புடன் வாங்கத் தொடங்கினோம். சிறுவர்களுக்கான ஒரு இதழில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை செயல்திட்டப் போட்டி நடத்துவார்கள். அதில் வெற்றி பெறும் பள்ளிகளுக்கு 500 ரூபாய் மதிப்புடைய நூல்களைப் பரிசளிப்பார்கள்.

அப்போட்டியில் எம் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பங்குபெறச்செய்து இதுவரை 6000 ரூபாய் மதிப்புடைய சிறந்த நூல்களைப் பரிசாகப் பெற்றிருக்கிறோம். இதுவரை நான் எழுதி வெளியிட்டுள்ள 14 நூல்களை பள்ளி நூலகத்திற்கு வழங்கியுள்ளேன். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நூல்களை சேர்க்கத் தொடங்கி ஒரு நூலகத்தைப் பள்ளியில் உருவாக்கினோம்.

இதற்கு மகுடம் சூட்டியதுபோல் பள்ளி நூலகத்தை விரிவுபடுத்த, மறைந்த எழுத்தாளர் வே.சபாநாயகத்தின் வாழ்நாள் சேமிப்பு நூல்களை அவரின் குடும்பத்தினர் அளித்தனர். சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய நூல்களையும் அவற்றைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்க இருபதாயிரம் ரூபாய் மதிப்புடைய அலமாரிகளையும் சபாநாயகத்தின் மகள் மங்கள நாயகி, மகன் அகிலநாயகம் ஆகியோர் வழங்கினர்.

இதன்மூலம் இன்று மன்னம்பாடி கிராம மாணவர்கள் புதுமைப்பித்தன் கதைகளையும் ந.பிச்சமூர்த்தி கவிதைகளையும் வல்லிக்கண்ணன் கட்டுரைகளையும் படிக்கின்ற வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு

சிங்கப்பூர் எழுத்தாளர் ரவிச்சந்திரன் தனது நூல்களை விற்றதன் மூலம் கிடைத்த ஒரு லட்ச ரூபாய்க்கு, நூல்களை வாங்கி 10 அரசுப் பள்ளிகளுக்கு கொடுத்துள்ளார். மன்னம்பாடி பள்ளி நூலகச் செயல்பாடுகளை முகநூல் வழியாக அறிந்த அவர், எங்கள் நூலகத்திற்கு 14,000 ரூபாய் மதிப்புடைய நூல்களை வழங்கியுள்ளார். 'அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்' என்ற குழுவினர் 2,000 ரூபாய் மதிப்புடைய க்ரியா பதிப்பக நூல்களை ஆசிரியர் உமாமகேஸ்வரி வழியாக இப்பள்ளி நூலகத்திற்குப் பரிசளித்துள்ளனர்.

வாசிப்பு இயக்கம்

ஒரு மாணவர் நூலகத்தில் என்ன புத்தகத்தைப் படிக்கிறாரோ அதைப் பற்றிய சில விவரங்களை ஒரு குறிப்பேட்டில் குறித்துக்கொள்ளவேண்டும். ஒரு நூலை முழுமையாகப் படித்தபின் அந்த நூலைப்பற்றி அவருக்குத் தெரிந்த முறையில் மற்ற மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும். இந்தப் பயிற்சியின் மூலம் நூல் திறனாய்வுக்கும் மாணவர்களைத் தயார்படுத்துகிறோம்.

இந்த முயற்சியை ஆசிரியர்களிடமும் மேற்கொள்ளும் திட்டம் உள்ளது. ஆசிரியர்கள் செய்யும் திறனாய்வைப் பார்த்து மாணவர்களும் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். இந்த முயற்சிகள் வெற்றிபெற்றால் மாணவர்களிடம் உள்ள படைப்பாற்றலை வளர்த்தெடுக்க கவிஞர்கள், எழுத்தாளர்களைக் கொண்டு பயிலரங்குகள் நடத்தும் திட்டமும் உள்ளது'' என்கிறார் ஆசிரியர் புகழேந்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x