Published : 09 Oct 2019 12:13 PM
Last Updated : 09 Oct 2019 12:13 PM

பள்ளிகளில் மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் வயதுக்கு ஏற்ற பாடல்களை ஒலிபரப்பலாம்: என்சிஇஆர்டி அறிவுரை

புதுடெல்லி

பள்ளிகளில் மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்களின் வயதுக்கு ஏற்ற இசை, மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் பாடல்களை ஒலிபரப்பலாம் என்று கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலான என்சிஇஆர்டி பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

ஜாமியா மிலியா இஸ்லாமியா அமைப்புடன் இணைந்து கல்வியாளர்கள் குழு, 34 நகராட்சிப் பள்ளிகளில் ஓராண்டுக்கும் மேலாக நடத்திய ஆய்வில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் ஓர் அறிக்கை தயாரித்து பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் என்சிஇஆர்டி உத்தரவு பிறப்பித்துள்ளது.

'கலையுடன் ஒருங்கிணைந்து கற்றல்' என்ற தலைப்பில் என்சிஇஆர்டி பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை பள்ளிகளுக்கு வழங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி, " குழந்தைகள் மத்தியில் இசை ஒலிபரப்பப்படும்போது அவர்களின் மனதிலும், மூளையிலும் சாதகமான பல மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் அமைதியாகவும், நிதானத்தோடும் வளர்வதற்கு இசை உதவி செய்கிறது.

பள்ளிக்கூடங்களில் மதிய உணவு இடைவேளையின்போதும், உணவு பரிமாறப்படும்போதும் அதற்கான இடைவேளையில் மாணவர்களின் வயதுக்கு ஏற்ற இசையை ஒலிபரப்பலாம்.

குறிப்பாக வயதுக்கு ஏற்ற புகழ்பெற்ற பாடல்கள், இசை மெட்டுகள், குழந்தைகளின் மனதுக்கு உற்சாகம் அளிக்கும் இசை, பாடல்கள் ஆகியவற்றை ஒலிபரப்பலாம்" எனத் தெரிவித்துள்ளது.

தொடக்கக் கல்வி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி மாணவர்களுக்கு ஏற்றவகையில் பள்ளிக் கட்டிடங்கள், அவர்களின் செயல்பாடுகளைத் திட்டமிடல், நேரத்தைத் திட்டமிடல், வகுப்பறை மேலாண்மை, மாணவர்களின் சமூகத்தொண்டு ஆகியவை குறித்து ஆசிரியர்களுக்கென தனியாக வழிகாட்டி நெறிமுறைகள் தரப்பட்டுள்ளன.

குழந்தைகளின் கலைத் திறன் குறித்து விமர்சிக்கவோ, ஒரு குழந்தையின் கலைத்திறனோடு மற்ற குழந்தையை ஒப்பிடவோ கூடாது. கலை எனும் விஷயத்தை கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதைப் பாடமாகவோ நடத்தத் தேவையில்லை என்று என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.

எதையெல்லாம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு செய்யலாம், செய்யக்கூடாது என்ற பட்டியலையும் என்சிஇஆர்டி வழங்கியுள்ளது.

கலைகள் குறித்த கற்றல் என்பது மாணவர்களுக்கு அச்சமூட்டும் வகையில் இருக்கக் கூடாது. குழந்தைகள் பயமில்லாமல் கலைகளில் ஈடுபடும் வகையில் தூண்ட வேண்டும் என என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x