Published : 09 Oct 2019 09:50 AM
Last Updated : 09 Oct 2019 09:50 AM

ராவணனை வழிபடும் கிராமம்: மகாராஷ்டிர மாநிலத்தில் விநோதம்

அகோலா

நவராத்திரி விழா நேற்று நிறைவு பெற்றது. இலங்கை மன்னன் ராவணனுடன் ராமர் போர் புரிந்து வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில் தசரா பண்டிகையாக வடமாநிலங்களில் கொண்டாடுகின்றனர். ராமரை கடவுளாக வழிபடும் இந்த நேரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகோலா குக்கிராமத்தில் ராமனை விட்டுவிட்டு ராவணனை வழிபடுகின்றனர்.

பல வட மாநிலங்களில் ராவணனின் உருவ பொம்மைகளை வைத்து அதை ராமன் அம்பு விட்டு எரிப்பது போல் நிகழ்ச்சிகள் நடத்தினர். ஆனால், இந்த கிராம மக்கள் ராமருக்கு இணையாக ராவணனுக்கு சிலைகள் வைத்து வழிபடுகின்றனர். ராவணனின் 10 தலைகளுடன் பிரம்மாண்ட சிலைகள் வைத்துள்ளனர்.

இந்த வழக்கத்தை கடந்த 200 ஆண்டுகளாகப் பின்பற்றி வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். ராவணனுடைய திறமை, கல்வியறிவு மற்றும் அழகியல் உணர்வை மதித்து வழிபடுவதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து கிராமத்தின் முதியவர்கள் கூறும்போது, ‘‘சீதையின் புனிதத் தன்மையைக் காக்கவே அவரை ராவணன் கடத்தியதாக நாங்கள் நம்புகிறோம்.

அதனால்தான் ராவணனின் உருவபொம்மையை நாங்கள் எரிப்பதில்லை. ராமரையும் நாங்கள் வணங்குகிறோம்’’ என்கின்றனர். இந்த கிராமத்தில் மகிழ்ச்சி, அமைதி நிலவுவதற்கு ராவணன் தான் காரணம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எங்கள் கிராமத்துக்கு வந்து ராவணவழிபாட்டை கண்டு ஆச்சரியப்படுகின்றனர் என்று கிராமத்தினர் கூறுகின்றனர்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x