Published : 09 Oct 2019 09:35 AM
Last Updated : 09 Oct 2019 09:35 AM

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் சீன பயணம்: அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சு

பெய்ஜிங்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று 2 நாள் பயணமாக சீனா வந்தடைந்தார். அதிபர் ஜி ஜின்பிங் உட்பட முக்கிய தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியாவின் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய அரசு நீக்கியது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஐ.நா. உட்பட உலகளவில் பிரச்சினையாக்க முயற்சித்தார்.

மேலும் காஷ்மீர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் பலரிடமும் பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர்கள் ஆதரவு தர மறுத்து விட்டனர். இந்நிலையில், பிரதமர் இம்ரான் கான் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று சீன தலைநகர் பெய்ஜிங் வந்தடைந்தார்.

அவரை சீனாவின் கலாச்சாரத் துறை அமைச்சர் லுவோ ஷுகாங், பாகிஸ்தானுக்கான சீன தூதர் யோ ஜிங் உட்பட தலைவர்கள் பலர் வரவேற்றனர். அதிபர் ஜி ஜின்பிங் உட்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இம்ரான் கான் ஆலோசனை நடத்துவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகு, அவர் சீனா வருவது இது 3-வது முறையாகும். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது. மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11-ம் தேதி இந்திய பயணம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தின் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்த சூழ்நிலையில் பிரமதர் இம்ரான்கானின் சீன பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்படுகிறது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x