Published : 07 Oct 2019 06:13 PM
Last Updated : 07 Oct 2019 06:13 PM

ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது தவறு: விமானப் படை தளபதி வருத்தம்

புதுடெல்லி

இந்திய விமானப் படை சார்பில் டெல்லியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விமானப் படைதலைமைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதோரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இன்றைய சூழலில் எத்தகைய தாக்குதலையும், அச்சுறுத்தலையும் முறியடிக்கக் கூடிய வலிமையுடன் இந்திய விமானப் படை விளங்குகிறது. பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை அழித்தது, இந்திய விமானப் படையின் அண்மைக்கால சாதனைகளுள் ஒன்று.

இந்த நடவடிக்கைக்கு பிறகு, இந்திய எல்லையில் தாக்குதல் நடத்துவதற்காக ஊடுருவிய பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தையும் நாம் சுட்டு வீழ்த்தினோம். எனினும், இந்த சம்பவத்தில் இந்தியாவின் மிக்-21 ரக போர் விமானத்தை நாம் இழக்க நேரிட்டது. பாலகோட் தாக்குதலின் தொடர்ச்சியாக, பிப்ரவரி 27-ம்தேதியன்று, காஷ்மீர் எல்லையில் இந்திய போர் விமானங்களுக்கும், பாகிஸ்தான் போர் விமானங்களுக்கும் இடையே மோதல் மூண்டது. அப்போது, காஷ்மீரின் பட்காம் பகுதியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான எம்ஐ - 17 ஹெலிகாப்டரை நமது போர் விமானமே தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. இதில், 6 விமானப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

இது, துரதிருஷ்டவசமானசம்பவம் மட்டுமின்றி இந்திய விமானப் படை செய்த மிகப்பெரிய தவறாகும். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதற்கு காரணமானவர்கள் மீது விமானப் படை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பிரான்ஸிடம் இருந்து வாங்கப்படும் ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையின் பலத்தை அதிகரிக்கும். மேலும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும் எஸ்-400 ஏவுகணையின் மூலம் எதிரிகளின் வான்வழித் தாக்குதல்களை எளிதாக முறியடிக்க முடியும். பாகிஸ்தான் உட்பட யாரும் இடைமறித்து கேட்க முடியாத வகையில் விமானப்படையின் ரேடியோ தகவல் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x