தொழில்முனைவோராகும் அரசுப் பள்ளி மாணவிகள்: `யூ டியூப்' சேனலிலும் பாடம் கற்கின்றனர்

தொழில்முனைவோராகும் அரசுப் பள்ளி மாணவிகள்: `யூ டியூப்' சேனலிலும் பாடம் கற்கின்றனர்
Updated on
1 min read

கோவை

அன்பான மாணவர்களே..
படிப்பதற்கே நேரமில்லை என்று கூறும் நிலையில், கோவை அரசு பள்ளி மாணவிகள் தொழில் முனைவோர்களாக மாறி வருகின்றனர் அத்துடன் 'யூ டியூப்' சேனலிலும் பாடம் கற்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் ராஜவீதியில் செயல்பட்டு வரும் துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் படிக்கின்றனர். இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 2,720 மாணவிகள் படிக்கின்றனர். தமிழ், ஆங்கில வழியில் மாணவிகளுக்கு பாடம் போதிக்கப்படுகிறது. இதேபோல் விளையாட்டு, கலை, இலக்கிய போட்டிகளில் திறமை காட்டி வருகின்றனர், இப்பள்ளி மாணவிகள்.

தற்போது, அரசு உத்தரவுபடி இப்பள்ளியிலும் தொழிற்கல்வி படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ஆர்வமுள்ள மாணவிகள் பலரை தொழில் முனைவோர்களாக்கி வருகின்றனர், ஆசிரியைகள். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.மணி அரசி கூறியதாவது:
எங்கள் பள்ளியில் ஆடை அலங்கார வடிவமைப்பு, பன்முகத் திறமை வளர்த்தல் ஆகிய தொழிற்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பன்முகத் திறமை வளர்ப்பில் பொறியியல், எலெக்ட்ரிக்கல், வேளாண்மை மற்றும் உணவு தயாரிப்பு போன்றவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவு தயாரிப்பில் வீட்டு முறையில் சாக்லெட் தயாரிப்பதற்கும், ஆய்வகத்தில் பொறியியல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இதற்கு 9-ம் வகுப்பில் 80 பேரும், 10-ம் வகுப்பில் 80 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொழிற்கல்வி ஆசிரியைகள் ஜின்சி மோல், சரண்யா ஆகியோர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். மாணவிகளும் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருகின்றனர். இதற்கு வாரத்துக்கு 6 பாடவேளைகள். இதில் 4 கருத்தியல் வகுப்புகளும், 2 செய்முறை வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. தொடர் பயிற்சி மாணவிகளை தொழில்முனைவோர்களாக உருவாக்கும். மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவிகளுக்கு 'நீட்' நுழைவுத்தேர்வு பயிற்சியும்அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளிக்கு தனி யூ டியூப்

இப்பள்ளியில் 4 சீர்மிகு (ஸ்மார்ட்) வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிநவீன தொடுதிரையில் மாணவிகள் பாடம் படிக்கின்றனர். இதேபோல் இப்பள்ளிக்கென இணையதளத்தில் 'CCMA GGHS' என்ற தனி யூ டியூப் சேனல் தொடங்கப்பட்டு, இப்பள்ளியின் அன்றாட நிகழ்வுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

அனைத்து பாட ஆசிரியைகளின் வகுப்புகள் உரிய விளக்கங்களுடன் கேமராவில் பதிவு செய்யப்பட்டு, இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இணையத்தைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளவர்கள் சந்தேகம் எழும்போது காணொளி வடிவில் பாடம் படிக்கலாம். இதேபோல் பள்ளியிலும்காணொளியின் உதவியுடன் மாணவிகள் பாடம் படிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவிகள் பயன்பெறும் வகையில், அனைத்து பாடங்களும் ஒளிப்பதிவு செய்து, பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இது மாணவிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறு ஆர். மணி அரசி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in