Published : 10 Jul 2023 04:20 AM
Last Updated : 10 Jul 2023 04:20 AM
நூறு சதவீத எழுத்தறிவு இலக்கை எட்ட புதுச்சேரியில் எழுத்தறிவு பணிஆணையம் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது புதுச்சேரியில் ஒட்டுமொத்த கல்வியறிவு 85.8 சதவீதமாக இருக்கிறது. பிராந்தியங்களில் மாஹே முதலிடத்தில் உள்ளது.
புதுச்சேரியில் கல்வித்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அங்குள்ள அனைத்து அரசு் பள்ளிகளிலும் மத்திய இடைநிலைக் கல்வி (சிபிஎஸ்இ) பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு வழிகளில் 100 சதவீதம் கல்வியறிவு என்ற இலக்கை எட்டுவதற்காக கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் கூடுதலாக நிதியும் ஒதுக்கப்படுகிறது.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. பள்ளிக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை ஏராளமான கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் கல்வியறிவு சதவீதம் 85.8 ஆக உள்ளது. இதில் ஆண்கள் 91.3 சதவீதமாகவும், பெண்கள் 80.7 சதவீதமாகவும் உள்ளனர்.
இதில், பிராந்தியங்களைப் பொருத்தவரை புதுச்சேரி 85.4 சதவீதம், காரைக்கால் 87.1 சதவீதம், மாஹே 97.9 சதவீதம், ஏனாம் 79.5 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தினை 100 சதவீதம் எழுத்தறிவுமிக்க மாநிலமாக மாற்ற, மாநில எழுத்தறிவு பணிஆணையம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் கூறியதாவது: எழுத்தறிவு பணி ஆணையத்துக்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் எட்டு பேர் கொண்ட நிர்வாக குழுவும், கல்வித் துறைசெயலர் தலைமையில் 10 பேர்கொண்ட செயற்குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குழுக்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், மாநில பயிற்சி மைய சிறப்பு பணி அலுவலர் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை புதுச்சேரி துணை நிலைஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கல்வித் துறை சார்பு செயல் வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.
இந்தியாவில் எழுத்தறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் கேரளா 94 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தினை 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்ற, மாநில எழுத்தறிவு பணி ஆணையம் கடந்த 1998-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் மூலம் லட்சக்கணக்கானோருக்கு எழுத்தறிவினைக் கற்றுக் கொடுத்து 100 சதவீத கல்வியறிவு இலக்கினை நோக்கி முன்னேறி வருகிறது.
குறிப்பாக கேரளத்தில் மீனவ மக்கள், புலம்பெயர்ந்து கேரளாவுக்கு வந்த தொழிலாளர்கள் ஆகியோரும் எழுத்தறிவு பெற தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பலர் தங்கள் கல்வியைப் பாதியிலேயே நிறுத்தியிருந்தனர். அவர்களும் கல்வியைத் தொடர வாய்ப்பும், வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் பழங்குடியின மக்கள் வாழும்பகுதிகள், மீனவ மக்கள், விளிம்புநிலை சமூகத்தில் இருக்கும் மக்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளித்து எழுத்தறிவு கொடுக்க சிறப்புகல்வியறிவு திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்பட உள்ளது.
தன்னாட்சி அமைப்பு போன்று செயல்பட உள்ள மாநில எழுத்தறிவு பணி ஆணையம், தேர்வு நடத்தி, முடிவுகளை வெளியிட உள்ளது. இதுவரை கற்றல் வாய்ப்பு இல்லாதவர்கள், இடையில் படிப்பினை துறந்தவர்கள் என அனைவரும் இந்த ஆணையத்தின் மூலம் படிப்பினை தொடர வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT