Published : 07 Jul 2023 04:05 AM
Last Updated : 07 Jul 2023 04:05 AM
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் புகழ்வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 70-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை எதிர்த்து விளையாடினார்.
2 மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் ஷின்னர் 7-5, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் 98-ம் நிலை வீரரான அர்ஜெண்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் சுற்று ஆட்டங்களில் 3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 7-5, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கிரேட் பிரிட்டனின் ஆர்தர் ஃபெரியையும், 5-ம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 3-6, 7-6 (7-1), 6-2, 6-7 (5-7), 7-6 (10-8) என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியமையும், 6-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் 7-6 (7-4), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கிரேட் பிரிட்டனின் ஜார்ஜ் லோஃபேகனையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
13-ம் நிலை வீரரான குரோஷியாவின் போர்னா கோரிக் 3-6, 5-7, 6-4, 6-3, 1-6 என்ற செட் கணக்கில் 308-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் கைடோ பெல்லாவிடம் போராடி தோல்வி அடைந்தார். 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 6-4, 2-6, 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் யானிக் ஹான்ஃப்மேனையும், 10-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ 7-6 (7-4), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் வூ யிபிங்கையும் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
3-வது சுற்றில் ஸ்வியாடெக்: மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், ஸ்பெயினின் சாரா சொரிப்ஸ் டார்மோவை எதிர்த்து விளையாடினார். இதில் இகா ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முதல் சுற்று ஆட்டங்களில் 10- ம் நிலை வீரரான செக்குடியரசின் பார்போரா கிரேஜிகோவா 6-2, 7-5 என்ற நேர் செட்டில் கிரேட் பிரிட்டனின் ஹீதர் வாட்சனையும், 13-ம் நிலை வீராங்கனையான பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாத் மியா 3-6, 6-0, 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் யுலியா புதின்சேவாவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
8-ம் நிலை வீராங்கனையான கிரீஸின் மரியா சக்காரி 6-0, 5-7, 2-6 என்ற செட் கணக்கில் உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்கிடம் தோல்வி அடைந்தார். 17-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ 6-1, 6-2 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் கிரீட் மின்னனையும், 20-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் டோனா வேகிக் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜாங் ஷுவாயையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT