

பெங்களூரு: இந்திய கால்பந்து வீரர் லாலியன்ஜுவாலா சாங்டே, வீராங்கனை மணீஷா கல்யாண் ஆகியோர் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரர், வீராங்கனை விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎப்எப்) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. அப்போது 2022-23-ம் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனையாக முறையே லாலியன்ஜுவாலா சாங்டே, மணீஷா கல்யாண் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய அணிக்காகவும், ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி அணிக்காகவும் விளையாடி வருபவர் சாங்டே. 26 வயதான சாங்டே இந்த சீசனில் இந்திய அணிக்காக 12 சர்வதேச போட்டிகளில் விளையாடி 2 கோல்களை அடித்துள்ளார். இந்த விருதுக்குசாங்டே, இந்திய வீரர்கள் நந்தகுமார் சேகர், நரோம் மகேஷ் சிங் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் சாங்டே இந்த விருதுக்குத் தேர்வானார்.
சாங்டே, தற்போது தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஐஎஸ்எல் போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி அணிக்காக 22 போட்டிகளில் விளையாடி 10 கோல்களை அடித்தார். மேலும் 6 கோல்களை அடிக்க உதவியும் செய்துள்ளார்.
கடந்த துராந்த் கோப்பை போட்டியில் 7 கோல்களையும், சூப்பர் கோப்பை போட்டியில் ஒரு கோலும் அடித்திருந்தார் சாங்டே,
சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு பஞ்சாபைச் சேர்ந்த மணீஷா கல்யாண், தாலிமா சிப்பர், காங்பம் ஸ்வீட்டி தேவி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர். இறுதியில் மணீஷா கல்யாண் இந்த விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.
மேலும் சிறந்த கால்பந்து பயிற்சியாளர் விருது கிளிப்போர்ட் மிராண்டாவுக்கும், பெண் பயிற்சியாளர் விருது பிரியா பராத்தி வலப்பிலுக்கும் வழங்கப்படவுள்ளது.