Published : 06 Jul 2023 04:08 AM
Last Updated : 06 Jul 2023 04:08 AM
துபாய்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அணிகளுக்கான தரவரிசையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தபோதிலும் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் முறையே 2 முதல் 10-வது இடங்களில் உள்ளன.
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 860 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார். ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 2 இடங்கள் முன்னேறி 826 புள்ளிகளுடன் உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா 825 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 813 புள்ளிகளுடன் 2 இடங்கள் பின்தங்கி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆலி ராபின்சன் (803), பாகிஸ்தானின் ஷாஹீன்ஷா அப்ரிடி (787) ஆகியோர் 5 மற்றும் 6-வது இடங்களில் உள்ளனர். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் (783) ஒரு இடம் பின்தங்கி 7-வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா (772), ரவீந்திர ஜடேஜா (756), இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராடு (764) ஆகியோர் முறையே 8 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 866 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு இறங்கி உள்ளார். நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 883 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 4 இடங்கள் முன்னேறி 882 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார். மார்னஸ் லபுஷேன் (873), டிராவிஸ் ஹெட் (872) ஆகியோர் 3 மற்றும் 4-வது இடங்களில் தொடர்கின்றனர். பாகிஸ்தானின் பாபர் அஸம் 862 புள்ளிகளுடன் ஒரு இடம் பின்தங்கி 6-வது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா (847), நியூஸிலாந்தின் டேரில் மிட்செல் (792), இலங்கையின் திமுத் கருணரத்னே (780), இந்தியாவின் ரிஷப் பந்த் (758) ஆகியோர் முறையே 8 முதல் 10-வது இடங்களில் உள்ளனர். ரோஹித் சர்மா 12-வது இடத்திலும் விராட் கோலி 14-வது இடத்திலும் தொடர்கின்றனர்.
இங்கிலாந்தின் பென் டக்கெட் 24 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தை பிடித்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அவர், முதல் இன்னிங்ஸில் 98 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 83 ரன்களும் சேர்த்திருந்தார். இதே ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் 155 ரன்கள் விளாசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 9 இடங்கள் முன்னேறி 23-வது இடத்தை அடைந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT