Published : 28 Jun 2023 04:08 AM
Last Updated : 28 Jun 2023 04:08 AM
சென்னை: பள்ளிகளில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை மாதம்தோறும் நடத்த வேண்டும் என்று மாவட்டமுதன்மை கல்வி அதிகாரிகள்மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் மாதம்தோறும் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் துறை சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்து அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், ஜூன் மாத ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் உள்ளிட்ட இயக்குநர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதிய மாணவர் சேர்க்கை: இதில், புதிய மாணவர் சேர்க்கை, தற்காலிக ஆசிரியர் நியமனம், நீதிமன்ற வழக்குகள், பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறுவிஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அனைத்து ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகளை சந்தித்து அவர்கள் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளோம். அவற்றில் ஒவ்வொன்றாக ஆராய்ந்து எதைச்செய்ய முடியும் எனவும், அதிலுள்ள சட்ட சிக்கல்கள் குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
குறிப்பாக, மாவட்டமுதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் முறையாக பதில் அளிக்கப்படுவதில்லை என ஏராளமான ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவற்றை சரிசெய்யவேண்டும். ஆசிரியர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை மாவட்ட அளவிலேயே தீர்க்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் முயற்சிக்க வேண்டும்.
நான் முதல்வன் திட்டம்: உள்ளூர் பண்டிகைகளுக்கு ஏற்றவாறு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர்கள் பரிந்துரை செய்தால் அதற்கு மாவட்டக் கல்வி அலுவலர் அனுமதி அளிக்க வேண்டும். மேலும், மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அதிகாரிகளுடன் இணக்கமாக செயல்பட வேண்டும். நான் முதல்வன் திட்டத்தில் கோடை விடுமுறையில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும்.
இதுதவிர தமிழ் மொழி திறனறிவுதேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடனே நிதியுதவி வழங்குவதுடன், டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தகுதி பெற்ற ஆசிரியர்களை பரிந்துரை செய்ய வேண்டும். இலவசக் கட்டாயக்கல்வி உரிமை சட்டம் தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
மேலும், மலைவாழ் பகுதிகளில் இருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விளையாட்டு உபகரணங்களை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி தரமானதாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதோடு, பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம், மாற்றுச்சான்றிதழ் வழங்குதல் தொடர்பான புகார்களை மாவட்ட அளவில் முடித்து வைக்க வேண்டும். மாதந்தோறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி பள்ளிகளில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
ஆங்கில பாடத்தில் கவனம்: பள்ளிகளில் போதை விழிப்புணர்வு மன்றம் அமைத்து மாணவர்களுக்கு தகுந்த நல்வழிகாட்டுதலை வழங்க வேண்டும். அண்மையில் நான் ஆய்வுக்குச்சென்ற இடங்களில் ஒருசில அரசு பள்ளிகளில் மாணவர்கள்சரியாக ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் தடுமாறியதை பார்த்தேன். எனவே, ஆங்கில பாடத்தில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணிநியமன மனுக்களை காலதாமதமின்றி பரிசீலிக்க வேண்டும். பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றனவா என்று கவனிக்க வேண்டும். சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் பாராட்ட வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாகச் செயல்பட்ட சிவகங்கை, ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சிறப்புப்பரிசும், சான்றிதழும் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT