

புதுடெல்லி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐந்தரை வயது சிறுமி பிரிஷா எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தை அடைந்து சாதனை செய்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் தனது பெற்றோர், 2 சகோதரிகளுடன் வசிக்கிறார் ஐந்தரை வயதான சிறுமி பிரிஷா. மும்பையில் ஐ.டி. இன்ஜினியராக பணிபுரியும் லோகேஷ், ஒரு மலையேற்ற வீரரும்கூட. அப்பா வழியில் மகள் பிரிஷாவுக்கும் மலையேற்றத்தில் ஆர்வம் பிறந்தது. இதையடுத்து அவருக்கு மலையேற்றத்துக்கான முறையான பயிற்சியை தந்தை லோகேஷூம், தாய் சீமாவும் வழங்கியிருக்கிறார்கள். அதன் விளைவாக, பிரிஷா தனது 2½ வயதிலேயே மலையேறத் தொடங்கிவிட்டார்.
தனது 3 வயதில், மகாராஷ்டிராவிலேயே மிகவும் உயரமான சிகரமான கால்சுபாயை தொட்டுவிட்டார். அந்த வகையில், எவரெஸ்ட் அடிவார முகாமை எட்டும் கடினமான முயற்சிக்கான பயிற்சியையும் பெற்றோரின்வழிகாட்டலில் பிரிஷா தொடங்கினார். தினமும் 5, 6 மைல் தூரம் நடப்பது, ஏரோபிக்ஸ் பயிற்சி, தனது அடுக்குமாடிக் குடியிருப்பு படிகள், பூங்கா சுவரில் ஏறுவது என்று தயாரானார்.
கடந்த மே 24-ம் தேதி நேபாளத்தின் லுக்லாவில் இருந்து தனது தந்தையுடன் மலையேற்றத்தை தொடங்கிய பிரிஷா, ஜூன் 1-ம் தேதி எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்தார். அங்கு இந்திய தேசியக்கொடியுடன் பெருமிதத்தோடு 'போஸ்' கொடுத்தார். '‘இவ்வளவு உயரமான இடத்தை எட்டுவதற்கு பெரியவர்களான மலையேற்ற வீரர்களே மிகவும் சிரமப்படுவார்கள். பலருக்கு மூச்சுத்திணறல், தலைவலி,மலைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள்ஏற்படும். ஆனால் பிரிஷா கஷ்டங்களை எல்லாம் எளிதாக கடந்து இந்த சாதனையை படைத்துவிட்டாள்'’ என்று பூரிப்புடன் சொல்கிறார் தந்தைலோகேஷ். அடுத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள சிகரங்களில் பிரிஷா ஏறுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.