

தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்றால் விமானத்தில் அழைத்துச் செல்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மாணவியை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார் தலைமை ஆசிரியர்.
மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தேசிய திறனறி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில், அரியலூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான 8-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். ஜெயங்கொண்டத்தை அடுத்த வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் திறனறி தேர்வில் வெற்றி பெறுவோரை, திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அந்தப் பள்ளியில் 8 பேர் திறனாய்வத்தேர்வு எழுதினர். அவர்களில் மாணவி மிருணாளினி தேர்ச்சி பெற்றார். இதையடுத்து, தான்அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஜூன் 3-ம் தேதி தனது சொந்த செலவில் மாணவி மிருணாளினியை திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார் தலைமை ஆசிரியர் அமுதா.