

புதிய கல்வி ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் தாங்கள் என்னவெல்லாம் சாதிக்க வேண் டும், எப்படி வெற்றி பெற வேண்டும் என்கின்ற உறுதிமொழி எடுக்க வேண்டிய தருணம் இது.
அதிக மதிப்பெண்கள் எடுத்துச் சாதிப்பது மட்டுமின்றி விளை யாட்டு, கலை, இலக்கியம், தகுதித் தேர்வு உள்ளிட்டவற்றிலும் தடம் பதிப்ப தற்கான வாய்ப்புகள் இன்று ஏராளம்.
பத்தாம் வகுப்பு செல்லும் மாண வர்கள் மேல்நிலை கல்வியில் விரும் பிய பாடப் பிரிவைத் தெரிவுசெய்ய நடப்பாண்டில் உயர் மதிப்பெண்கள் பெறவேண்டியது அவசியம். ஆகவே இம்மாணவர்கள் தொடக்கம் முதலே சுணக்கம் இன்றி முழு ஈடுபாட்டுடன் கற்றலில் ஈடுபட வேண்டும்.
பிளஸ் 2 மாணவர்கள் உயர் கல்விக்குத் தரமான கல்லூரி, பல்கலைக் கழகத்தில் சேர்வதற்கும், விரும்பிய பாடப் பிரிவை எடுத்துப் படிப்பதற்கும் நல்ல மதிப்பெண்கள், கட்ஆப் தேவைப்படும். இதை மனதில் நிறுத்தி, தொடக்கம் முதலே கூடுதல் பயிற்சியில் முனைப்புக் காட்ட வேண்டும்.
மன்ற செயல்பாடுகள்
உயர் மதிப்பெண்களோடு, தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள, பன்முகத்திறனை மேம்படுத்த, நன்னெறிகளை அறிந்திட வழிவகுக் கும் மன்ற செயல்பாடுகள் பள்ளி களில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மாணவர்கள் படிக்கும் வகுப்புக்கு தக்கபடி மத நல்லிணக்கம், தொன்மைப் பாதுகாப்பு, தலைமைப் பண்பை வளர்க்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை பள்ளிதோறும் நடத்தப் படுகின்றன.
சாரண சாரணியர் படை, செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை, சாலை பாதுகாப்பு மன்றம், தேசிய பசுமைப் படை, நூலக மன்றம், நுகர்வோர் மன்றம், ஆற்றல் மன்றம், குழந்தை உரிமை பாதுகாப்பு மன்றம் முதலான கல்விசாரா மன்றங்களில் மாணவர்கள் தங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப இணையலாம்.
மன்ற செயல்பாடுகள், விளை யாட்டு, கலைத்திருவிழா வாயிலாகக் கிடைக்கும் சான்றிதழ்கள் மேல் படிப்பு, வேலைவாய்ப்பின்போது உதவியாக அமையும்.
செயலி, தொலைக்காட்சி
தொடக்கநிலை வகுப்பு மாணவர் களுக்கு அரசு வெளியிட்டுவரும் ‘ஊஞ்சல்’ இதழ், உயர் வகுப்பு மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ இதழ்
ஆகியவற்றை மாணவர்கள் ஆர்வ முடன் படித்தால் பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தற்பாது காப்பு உள்ளிட்டவற்றில் மேம்படலாம்.
2023இல் வடிவமைக்கப்பட்ட ‘மணற்கேணி’ கல்விச் செயலியைத் திறன்பேசியில் பதிவிறக்கம் செய்து மாணவர் கள் பயன்படுத்துவது கற்றலுக்கு உதவியாய் அமையும்.
இந்தக் கல்வி யாண்டில் இவற்றை மேற்கொள்ள மாணவர்களுக்குப் பெற்றோர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சியை மாணவர்கள் பார்த்து வருவது கூடுதல் மதிப்பெண்கள் பெற உதவும்.
தகுதித் தேர்வுகள்
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய வருவாய் வழித் திறனாய்வு தேர்வில் பங்கெடுத்து வெற்றி பெற்றால், அடுத்து நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறலாம்.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச் சரின் திறமைத் தேடல் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பத்து மாதங் களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் வழங்கப்படுகிறது.
11ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மொழி இலக்கிய சிறுநெறித் தேர்வு நடத்தப்பட்டு 1,500 மாணவர்கள் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1,500 விதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்தத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற மாணவர்கள் முயற்சிக்கலாம். நூலகம், அருங் காட்சியகம், புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்துவது சிறப்பாக அமையும்.
புதிய பழக்கங்கள்
உயர் தொழில்நுட்ப ஆய்வகம், திறன்மிகு வகுப்பறையில் மாண வர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கெடுக்கும்போது பாடம் தொடர்பாகப் பல புதிய செய்திகளைக் கற்றுக் கொள்வதற்கான வாசல் திறக்கிறது.
திறன்பேசி பயன்பாட்டைக் குறைத்தல், மாலையில் விளையாடுதல், அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிளில் செல்லுதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது, துரித உணவுப் பழக்கத்தைக் கைவிட்டு சிறுதானிய உணவு வகைகளை உட்கொள்ள உறுதி எடுக்க வேண்டும்.
ஓய்வு நேரத்தில் உங்களுக்கு விருப்பமான பணியைச் செய்யுங்கள். நல்ல நண்பர்களைத் துணை யாகக் கொள்ளுங்கள். மன அழுத்தம் இன்றி மன மகிழ்ச்சியுடன் பாடப் புத்தகங்களைக் கையில் எடுங்கள்.
பெற்றோருக்குச் சிறு சிறு வேலைகளுக்கு உதவியாக இருப்பது சிறப்பு. வீட்டில் ஓர் உண்டியல் பெட்டியில் சிறுக சிறுகச் சேமிக்கும் பழக்கத்தைத் தொடங்குகள்.
புதிய கல்வி ஆண்டில் நல்ல, புதிய பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து பள்ளியில் முன்மாதிரி மாணவராகத் திகழ வாழ்த்துகள்.
- கட்டுரையாளர்: ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேடப்பட்டி, ஆத்தூர் ஒன்றியம், திண்டுக்கல் மாவட்டம்; choraamu@gmail.com