

மித்ரன் சென்னையில் இருந்து கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு போனான். வழியில் பசுமையான பயிர்கள், மரங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான். பாட்டி பேரனை பார்த்து பூரித்துப்போனாள்.
கை கால் முகம் கழுவி விட்டு சாப்பிட வா என்று அழைத்தாள். மித்ரன் நகரத்தில் குழாயைச் திறந்து விட்டே பழக்கமாகி போனதால் சுற்றும் முற்றும் பார்த்தான். என்னப்பா தேடுகிறாய் என்று கேட்டவுடன் குழாயைத்தான் என்றான். இங்க எல்லாம் குழாய் ஏதுப்பா கிணற்றில் தண்ணீர் இறைத்து தான் கழுவ வேண்டும்.
என்ன இந்த பெரிய அண்டாவிலா என்று கிண்டல் செய்தான். எப்பவுமே உனக்கு குறும்பு தான் என்று சொல்லிவிட்டு கிணற்றில் தோண்ட தோண்ட தான் நீர் இறைக்கும் என்றார். ஒரு வழியாக பாட்டி உபசரிப்பில் நன்கு சாப்பிட்டு விட்டு அயர்ந்து உறங்கிப் போனான்.
கண் விழித்துப் பார்த்தால் அலமாரி நிறைய புத்தகம் இருந்தது அதைப் பார்த்து பாட்டி இதை எல்லாம் நீங்கள் படிப்பீர்களா? என்று ஆர்வத்தோடு கேட்டான். அதற்குள் உள்ளே நுழைந்த தாத்தா நான் தான் படிக்கிறேன். நீங்க எல்லாம் எதோ ஒரு பெட்டியை வைத்து தட்டுறீங்க உலகத்தையே தெரிஞ்சுகிறீங்க அந்த காலத்துல. எங்க சொத்தே புத்தகம் தானே.
கண்டதையும் படிப்பவன் பண்டிதன் ஆவான் என்று கேள்விப்பட்டு இருக்கியா? அப்படி படித்து தான் அறிவை வளர்த்துகிட்டோம். எப்படி கிணறு தோண்ட தோண்ட நீர் இறைக்குமோ அப்படித் தான் புத்தகத்தைப் படிக்க படிக்க நல்லா அறிவு பெருகும் என்று ஆனந்தமாய் சொன்னார். இருவரும் இணைந்து மாலையில் கோயிலுக்குச் சென்று மகிழ்ந்தனர்.
அறிவுத் திறனை வளர்க்க புத்தகம் பயன்படுவதை கிணற்றுடன் ஒப்பிட்டு வள்ளுவர் கல்வி அதிகாரத்தில்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு. - குறள்:396
என்கிறார்.
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்