

இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கவும், தங்கள் நண்பர்கள் கூட்டத்தின் மத்தியில் பிரபலமாகவும் பல முயற்சிகள் எடுக்கிறார்கள் என்பதை கடந்த இரண்டு வாரங்களாக பார்த்தோம்.
இவை இரண்டிற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? ஏன் பிரபலமாக வேண்டும்? இந்த கேள்விகளுக்கான விடையை உளவியல் கோணத்தில் புரிந்து கொண்டால் சைபர் வெளியில் பாதுகாப்பை அதிகரிக்கலாம்.
மனிதர்களான நாம் சமூக விலங்குகள் என்று கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் கூறினார். காட்டுவாசிகளாக இருந்தபோது குழுவாக மனிதர்கள் வாழ்ந்ததால் ஆபத்திலிருந்து வெகுவாக தப்பிக்க முடிந்தது. விலங்குகளை எதிர்கொள்ளக் குழு உதவியது. பின்னாட்களில் விவசாயம் செய்வது எனப் பல விதங்களில் குழுவில் இருப்பது நம் வாழ்வையும், பாதுகாப்பையும் உறுதி செய்தது.
நாம் இன்று சைபர் தொழில்நுட்பத்தை வடிவமைத்து திறம்பட பயன்படுத்தும் நிலைக்கு வளர்ந்துவிட்டாலும், நமக்குள் நம் மரபணுவில் அதே பழைய காட்டுவாசி மனிதன் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறான். அவன் குழுவாக இருப்பதன் லாபங்களைப் போதித்துக் கொண்டே இருக்கிறான்.
நமக்கான துணையைத் தேடிக்கொள்ளவும், மற்றவரின் கவனத்தை ஈர்க்க வேண்டி இருப்பதாலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து தங்கள் குழுவை உருவாக்கவும், அந்த குழுவைத் தக்கவைத்துக் கொள்ளவும் தவிக்கிறார்கள். அப்படியான ஒரு குழுவைஉருவாக்கும் முயற்சியில்தான் நாம் நம் அடையாளங்களை உருவாக்கிக் கொள்கிறோம்.
நம்மை பிரபலப்படுத்திக் கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும். மிக முக்கியமாகக் குழுவை உருவாக்க நம் விருப்பம்போல் நபர்களை தேர்வு செய்யலாம். பிரபலம் என்பது பல வேலைகளை மிக எளிதாகச் செய்து முடிக்க உதவும். இங்கு நான் பிரபலம் என் குறிப்பிடுவது பள்ளி, கல்லூரி அளவில். இப்போது உள்ள பெற்றோர் சமூக அளவில் தங்கள் பிள்ளை பிரபலமாக வேண்டும் என்று கடுமையாகப் போராடுகிறார்கள். அவர்களே சைபர் வெளியில் பிரபலமாக தேவையான அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள். பிரபலமாகிவிட்டால் நல்ல அந்தஸ்து கிடைக்கும், பணம் கிடைக்கும் என்றே அவர்களும் நம்பத் தொடங்கிவிட்டார்கள்.
இந்த அடிப்படை மனப்பாங்கினால்தான் பலர் சமூக வலைத்தளங்களுக்கு தங்களை அறியாமலேயே அடிமையாகி விடுகிறார்கள். இதன் விளைவாகத்தான் பெற்றோர் விலைஉயர்ந்த அலைபேசி வாங்கி தர மறுத்தால் இளம் மாணவர்கள் மிக எளிதில் உணர்ச்சிவசப்படுவது, தற்கொலை எனும் எல்லைவரை செல்வது, பிரச்சனைகளை எதிர்கொள்ளப் பயப்படுவது போன்ற சிக்கல்களில் சிக்கித் தடுமாறுகிறார்கள்.(தொடர்ந்து பேசுவோம்)
- கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்; தொடர்புக்கு: write2vinod11@gmail.com