

இந்திய அளவில் குழந்தைகள் தினம் நவம்பர் 14 என்றால் சர்வதேச அளவில் குழந்தைகள் தினம் நவம்பர் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘அனைவரையும் உள்ளடக்கிய வாழ்க்கை’ – Inclusive Life.
ஆமாம், இந்த வாழ்க்கையும் உலகமும் எல்லோரையும் உள்ளடக்கியதுதானே? அப்படித்தானே வாழ்கின்றோம் என்று தோன்றலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றார்கள். அது உடல் ரீதியாக பிறக்கும்போதே இருக்கும் சிக்கலில் ஆரம்பித்து, விபத்தினால், வளரும்போது சில உடல்/மன ரீதியான குறைபாடுகளுக்கு உள்ளாகின்றனர்.
பிறக்கும்போதே கண், காது, கை, கால் எனக் கண்ணுக்குத் தெரிந்த உறுப்புக்களில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம். தமிழில்மிக அழகான வார்த்தையில் “மாற்றுத்திறனாளிகள்” என்று அழைக்க தொடங்கி இருக்கிறோம். புழக்கத்திலே அவர்களைச் சுட்ட அல்லது குறைபாடுகளைச் சுட்ட நிறைய வார்த்தைகள் உள்ளன அவற்றை முதலில் தவிர்க்க வேண்டும். முன்னர் ஊனமுற்றோர் என்ற வார்த்தை இருந்தது அதனையும் மாற்றி தற்சமயம் மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்க தொடங்கியுள்ளோம். நல்ல வார்த்தைகளே அவர்களுக்கு நாம் கொடுக்கும் முதல் மரியாதை.
உள்ளடக்கிய உலகம்: சில நாட்கள் முன்னர் செய்திகளில் பார்த்திருக்கலாம். மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் செல்லப் பாதை அமைத்துள்ளனர். கடல் மணலில் நான்கு சக்கர வாகனத்தைச் செலுத்த முடியாததால் கடலில் கால் நனைக்க முடியாதவர்கள் இப்போது கடலுக்கு அருகே செல்லும் ஏற்பாடு. இது ஒரு சிறு ஆரம்பம் மட்டுமே. நாம் கடக்க வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது.
சாலைகளில், கட்டிடங்களில், அலுவலகங்களில், கழிவறைகளில், நடைபாதைகளில் எல்லாம் எல்லோருக்குமான ஏற்பாடு தேவை. வளர்ந்த நாடுகளில் இதற்கான முனைப்புகள் பல ஆண்டுகள் முன்னரே தொடங்கிவிட்டது. முதலில் அது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் தேவை. மிக முக்கியமாக மாணவர்களிடம் தேவை.
உள்ளடக்கிய வகுப்பறைகள்: உலகம் மட்டுமல்ல வகுப்பறைகளும் அனைவரையும் உள்ளடக்கிய வகுப்பறைகளாக மாற வேண்டும். உடல் குறைபாடு மட்டுமல்ல இன்னும் ஏராளமான குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதனைப் பற்றிய விழிப்புணர்வு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அறிந்திருப்பது போலவே மாணவர்களும் அறிந்திருக்க வேண்டும். மற்றவர்களைவிட மாணவர்கள் எளிதாக அதனை கண்டுபிடிக்கவும் முடியும். குறைபாடுகளை வேறு நண்பர்கள் கிண்டலடித்தாலோ நையாண்டி செய்தாலோ முதல் ஆளாக இறங்கி அந்த நபரிடம் விளக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையின் சார்பாக நிற்க வேண்டும்.
கலவையான மாணவர்கள் இருக்கும்போது இயல்பாக ஒவ்வொருவருக்கும் பன்முகத்தன்மை உருவாகும். சிறப்பு குழந்தைகளுக்கு வகுப்பறைகளில், பள்ளி வளாகத்தில் நிறைய தேவைகள் இருக்கும். அவை இல்லாதபோது குரலும் கொடுக்க வேண்டும், கரமும் கொடுக்க வேண்டும். குரலற்றவர்களின் குரலாக இருப்பதற்கு இதுவே ஆரம்பப்புள்ளி. சமமாக பாவிக்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமையும்கூட. குறைபாடு உள்ள குழந்தைகளைப் பள்ளி, நிர்வாகம், பெற்றோர் ஆதரிக்க வேண்டும். அதே சமயம் சக குழந்தைகளின் அரவணைப்பு மிகப்பெரிய சக்தி. (தொடரும்) - கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர், தொடர்புக்கு: umanaths@gmail.com