Published : 20 Sep 2022 06:30 AM
Last Updated : 20 Sep 2022 06:30 AM

சிறுகதை: விலங்குகள் மத்தியில் பணிவு!

பெட்ரோ பாப்லோ சாக்ரிஸ்தான்

ஒரு காலத்தில், கங்காரு ஒன்று தடகள போட்டியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, கர்வமும் கொடூர எண்ணமும் கொண்டதாக மாறியது. மற்றவர்களைக் கேலி செய்வதில் அதிக நேரத்தைச் செலவிட்டது. அதிலும், மெதுவாக, தாங்கித்தாங்கி நடக்கும் பெங்குயினை அதிகம் கேலி செய்தது. மெதுவாக, தாங்கித்தாங்கி நடப்பதே போட்டியில் ஜெயிப்பதற்கு பெங்குயினுக்குத் தடையாகவும் இருந்தது.

ஒருநாள், நரி ஓட்டப்பந்தயம் ஒன்றை ஏற்பாடு செய்தது. “இந்த முறை பெங்குயின்தான் வெற்றி பெறப்போகிறது” என்று எல்லாரிடமும் சொன்னது. ஒவ்வொருவரும் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு சிரித்தார்கள். ஆனால், தலைக்கனம் பிடித்த கங்காருவோ, மிகவும் கோபப்பட்டது. வழக்கத்தைவிட கூடுதலாக பெங்குயினை அவமானப்படுத்தியது. பெங்குயினுக்கு போட்டியில் பங்கெடுக்கவே விருப்பம் இல்லை. ஆனாலும், எல்லாரும் கண்டிப்பாக பங்கெடுக்க வேண்டும் என்பது பாரம்பரியம் என்பதால் வேறு வழியில்லை.

போட்டி நடந்த நாளில், நரிக்குப் பின்னால் நின்ற குழுவினருடன் பெங்குயின் சேர்ந்து நின்றது. அனைவரையும் ஒரு மலைக்கு அழைத்துச் சென்றது நரி. செல்லும் வழியில், “மலையிலிருந்து உருண்டு விழப் போகிறது”, “தொப்பையுடன் சருக்கிக்கொண்டே கீழே போகப் போகிறது” என்று எல்லா விலங்குகளும் பெங்குயினைக் கேலி செய்தன.

ஆனால், உச்சிக்குச் சென்றதும் எல்லாரும் கப்சிப்பென்று அமைதியானார்கள். மலை உச்சியில் பெரிய பள்ளம் இருந்தது. பள்ளத்தில் நீர் நிறைந்து ஏரிபோல காட்சியளித்தது. “நீச்சலடித்து யார் மறுபக்கம் முதலில் செல்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்” என்று சொன்னது நரி. சொல்லியதும், போட்டியைத் தொடங்க சமிக்ஞை கொடுத்தது.

பெங்குயினுக்கு பயங்கர உற்சாகம். தத்தித்தாவி ஏரியின் ஓரத்தில் வேகமாக நீந்தியது. நீரில் கால் வைத்ததும் அதன் வேகத்தை யாராலும் முறியடிக்க முடியவில்லை. மற்றவைகள் தொலைவில் வரும்போதே பெங்குயின் எல்லையைத் தொட்டுவிட்டது.

சிரமப்பட்டு முயன்றாலும் கங்காருவால் மறுகரையை அடைய இயலவில்லை. கண்ணீர் விட்டது, அவமானமாக உணர்ந்தது, ஏறக்குறைய மூழ்கிவிட்டது.

பதிலுக்கு கேலி செய்ய பெங்குயின் காத்திருப்பதுபோல தோன்றியது. இருந்தபோதும், தன்னுடைய துயரத்தில் இருந்து பெங்குயின் நிறைய பாடங்களைக் கற்றிருந்தது. எனவே, கேலி செய்வதற்குப் பதிலாக, எப்படி நீந்துவது என்று கங்காருவுக்கு கற்றுக் கொடுக்கத் தொடங்கியது பெங்குயின்.

மீதம் இருந்த நாள் முழுவதும், ஏரியில் விளையாடி விலங்குகள் அனைத்தும் மகிழ்ச்சியாக இருந்தன. அதிகம் மகிழ்ச்சியாக இருந்தது யாரென்றால், அது நரிதான். தன்னுடைய புத்திசாலித்தனத்தால், கங்காருவின் அகந்தையை நரியால் குறைக்க முடிந்தது.

தமிழில்: சூ.ம.ஜெயசீலன்

தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x