

பாடம் நடத்துவதைத் தாண்டி மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளும் ஆசிரியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘அன்பாசிரியர்’ விருது ஒவ்வோர் ஆண்டும் நிரூபித்து வருகிறது.
இம்முறை 600 ஆசிரியர்கள்வரை விண்ணப்பித் திருந்த நிலையில், அவர்களில் மாவட்டத்துக்கு ஒருவரைத் தேர்வு செய்வது நடுவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே அமைந்தது. இந்தச் சவாலான பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்க பேராசிரியர்கள், மூத்த கல்வியாளர்கள் மத்தியில் எனக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
பள்ளிக்கூடத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தவும், மாணவர்கள் உண்ணும் உணவின் தரத்தை உறுதி செய்யவும், விளையாட்டுப் போட்டிகளில் அணிந்து கொள்வதற்கான பிரத்தி யேக சீருடைகளைத் தம் சொந்த செலவிலும், வள்ளல் குணம் படைத்த மனிதர்களைச் சந்தித்து பெறுவதிலும் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்ட ஆசிரியர்களை என்ன பாராட்டினாலும் தகும். ஒவ்வோர் ஆசிரியரும் தங்கள் மாணவர்களின் திறமைகளை சொல்லிப் பூரித்துப் போயினர்.
மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக, தொழில் முனைவோராக இன்னும் பல துறைகளில் சாதனை படைத்து வரும் மாணவர்களுடன் இன்றும் தொடர்பில் இருப்பதைச் சொல்லும்போது அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.கற்றலில் குறைபாடு இருக்கும் குழந்தை களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் அவரவர் களுக்கு ஏற்ற வகையில் கற்பிக்கும் முறையை வடிவமைத்துக் கொண்ட ஆசிரியர்களைத் தாயாகவே நினைக்கத் தோன்றுகிறது.
கரோனா தொற்றுநோய்க் காலத்துக்குப் பிறகு படிக்கவைப்பதில் சின்ன சின்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் அதற்குத் தீர்வு காணவும், எழுத்துப் பிழை இல்லாமல் எழுதவும் மீண்டும் மீண்டும் அந்தச் சொற்களை எழுதச் சொல்லி - உச்சரிக்கச் சொல்லி ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சி அடுத்த தலைமுறையைச் சிறப்பாக வழி நடத்தும். குடிப்பழக்கத்துக்கு ஆளான அப்பாக்களால் குழந்தைகள் வழி தவறிப் போய் விடக் கூடாது என்பதில் ஆசிரியர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றனர்.
பதின்பருவத்தில் ஏற்படும் பிரச்சினைகளையும் ஆசிரியர்களோடு மனம் விட்டுப் பேசும் அளவுக்கு மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்கும்போது நெகிழ்ந்து போனேன். பாடத்திட்டம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு பாடநூல் கழகத்துக்கும் பரிந்துரை களை சில ஆசிரியர்கள் வழங்கியிருக்கிறார்கள்.
மாணவர்களைத் தகுதிமிக்க குடிமக்களாக உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் திறன்மிகு வகுப்பறைகள், கலைத் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் எனத் தமிழ்நாடு அரசும் தனி கவனம் செலுத்தி வருவது போற்றுதலுக்குரியது.
- இரா. மஞ்சுளா, கட்டுரையாளர்: உதவிப் பேராசிரியர், சென்னை சமூகப்பணிக் கல்லூரி.