

Taxiing எனும் சொல்லை விமான விபத்து தொடர்பான செய்தியில் படித்தேன். அதன் பொருள் என்ன? - விமான நிலையத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு விமானம் செல்வது, பயணத்தின் முதல் கட்டமாகத் தரையிலிருந்து மேலெழும்பத் தொடங்கு வதற்கு முன் தரையில் சற்று நேரம் பயணிப்பது முதலிய விமானம் தரையில் மேற்கொள்ளும் இயக்கத்தைத்தான் taxiing என்பார்கள்.
Tournament என்பதும் match என்பதும் ஒரே பொருள் கொண்டவையா? - Match என்பது ஒரே போட்டி. Tournament என்பதில் தொடர்ச்சியான போட்டிகள் இருக்கும். கால் இறுதிச்சுற்று, அரை இறுதிச்சுற்று, இறுதிச்சுற்று என Tournament முன்னேறும்.
Vicious circle என்பது என்ன? - இதை நச்சு வட்டம் என்பார்கள். ஒரு மோசமான அல்லது எதிர்மறையான சூழல். இதில் உண்டாகும் சிக்கல் காரணமாக அது வேறு ஒன்றையும் மோசமாக்குகிறது. இந்தச் சுழற்சி தொடர்ந்தால் அது நச்சு வட்டம்.
ஏழ்மை காரணமாக சில குடும்பங்களால் தங்கள் குழந்தைகளைச் சிறந்த கல்விக்கூடங்களில் படிக்க வைக்க முடிவதில்லை. இதன் காரணமாக அவர்களுக்கான சிறந்த வேலைவாய்ப்பு குறைகிறது. இதன் காரணமாக அவர்களின் அடுத்த தலைமுறையும் ஏழ்மையில் சிக்குகிறது. இது ஒரு vicious circle.
முன்அனுபவம் தேவை என்பதால் வேலைவாய்ப்பு மறுக்கப்படலாம். ஆனால், இப்படி மறுக்கப்பட்டுக் கொண்டே இருந்தால் அனுபவம் எப்படிக் கிடைக்கும்? - Vicious circle. Virtuous circle என்பது இதற்கு நேரெதிரானது. ஒரு நல்ல விஷயம் பல நல்ல விளைவுகளை உண்டாக்கும். அந்த நல்ல விளைவுகள் முதலில் குறிப்பிட்ட நல்ல விஷயத்தை மேலும் உறுதிப்படுத்தும், பரவலாக்கும்.
ஒரு நிறுவனம் சிறந்த வாடிக்கையாளர் சேவையை அளிக்கிறது. அதனால் வாடிக்கையாளர்கள் அந்த நிறுவன ஊழியர்களிடம் மிகவும் சிறப்பாகப் பழகுகிறார்கள். எனவே ஊழியர்கள் மேலும் சிறப்பாகப் பணிபுரிகிறார்கள். இது வாடிக்கையாளர் சேவையை மென்மேலும் மேம்படுத்துகிறது. Virtuous circle.
கேட்டாரே ஒரு கேள்வி
Red என்கிற சொல் சிவப்பு எனும் வண்ணம், படிப்பது என்பதன் இறந்தகாலம் ஆகியவற்றைத் தவிர வேறு பொருள் கொடுக்கிறதா? - வாசகரே, வேறு பொருளை அறிவதைவிட வேறொன்றை முக்கியமாக அறிய வேண்டும். Red என்பது சிவப்பு வண்ணத்தைக் குறிக்கிறது. ஆனால், பயன்பாட்டைப் பொறுத்தவரை அது பலவற்றை உணர்த்தும். வணிகத்தில் red, நட்டத்தைக் குறிக்கும். மருத்துவ அகராதியில் red, தோலின் சிவப்புப்பகுதியைக் குறிக்கும். அரசியலில் red, கிளர்ச்சியாளர்களைக் குறிக்கும்.
நீங்கள் குறிப்பிட்டதில் ஒரு முக்கிய திருத்தம். Read என்பதன் இறந்தகாலம் read என்பதுதான். உச்சரிக்கும்போது மட்டுமே அதை red என்பதுபோல் உச்சரிப்போம். அதே நேரம் lead என்பதன் இறந்தகாலச் சொல் led என்பதாகும்.
சிப்ஸ்
Wellness? - உடல், மன ஆரோக்கியம்.
பலரும் ஸ்பெல்லிங் தவறு செய்யக்கூடிய எளிய சொல் எது? - சட்டெனத் தோன்றியது – Pronunciation (அதுவே, pronounce என்பதில் n என்பதை o தொடர்கிறது)
Playlist என்பது நமக்கு விருப்பமானவற்றின் பட்டியலா? - பாடல்களின் பட்டியல். தேர்ந்தெடுத்த பாடல்களின் தொகுப்பு.
சென்ற இதழில் அறிவிக்கப்பட்ட போட்டியின் முடிவுகள் அடுத்த இதழில் வெளியிடப்படும்.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com