விவசாய நிலத்தை site எனலாமா? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 134

விவசாய நிலத்தை site எனலாமா? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 134
Updated on
2 min read

Reciprocal என்பது என்ன? - ஒருவழிப் பாதையாக இல்லாமல் ஒருவருக் கொருவர் பயன் உள்ளவராக இருப்பது. We help them. They help us. The arrangement is reciprocal. கணிதத்தைப் பொறுத்தவரை ஓர் எண்ணை எந்தக் குறிப்பிட்ட எண்ணால் பெருக்கினால் விடை 1 என்று வருகிறதோ, அந்தக் குறிப்பிட்ட எண் முதல் எண்ணின் reciprocal. 6 என்ற எண்ணின் reciprocal 1/6. ஏனென்றால் இவற்றைப் பெருக்கினால் விடை 1 என்று வரும்.

Populous, population, populace ஆகிய வார்த்தைகள் ஒரே அர்த்தம் கொண்டவையா? - மூன்றுக்கும் மக்கள் என்பது அடிப்படை. ஆனால், பொருளில் வேறுபடுகின்றன. Population என்பது மக்கள் தொகை. அதாவது ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை. Populous என்பது adjective. மக்கள் நெருக்கம் (அடர்த்தி) அதிகமுள்ள அல்லது மக்கள் நிறைந்த என்று பொருள். It is a populous city என்றால் அந்த நகரில் நிறைய மக்கள் வசிக்கிறார்கள்.

Populace என்பது noun. மக்கள் என்பதைக் குறிக்கிறது. The MLA addressed the sufferings of the populace என்றால் அந்த எம்எல்ஏ பொது மக்களின் அவதிகள் அல்லது துன்பங்களைப் பற்றிப் பேசினார் என்று பொருள்.

Push, shove இரண்டும் ஒரே பொருள் கொண்ட சொற்கள்தானா? - கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனால், shove என்பது முரட்டுத்தனமாகத் தள்ளுவது. “ஜருகண்டி ஜருகண்டி” என்பதைத் தொடர்ந்து நீங்கள் push செய்யப்படுகிறார்களா அல்லது shove செய்யப்படுகிறார்களா என்பது அன்று வரிசையில் நிற்கும் கூட்டத்தைப் பொறுத்தது.

கிராமத்தில் அரை ஏக்கர் நிலம் வாங்கி போட்டு விட்டதாக ஒரு நண்பர் குறிப்பிட்டார். விவசாய நிலமான அதை site என்றும் குறிப்பிட்டார். அது சரியா? - அது தவறு. விவசாய நிலத்தை site என்று கூறக்கூடாது. நிறைய ஃப்ளாட்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்ட நிலத்தை site என்று கூறிவிடலாமா? கூடாது. பின்? Site என்றால் அது ஒரு நிலமாகவும் இருக்கும். அதில் ஏதோ கட்டுமானம் நடப்பதாக திட்டமிடப்பட்டிருக்கும் அல்லது நடந்து கொண்டிருக்கும்.

கேட்டாரே ஒரு கேள்வி: ஒரு பொருளின் price அதிகம் என்றாலும், அதன் worth அதிகம் என்றாலும் ஒரே அர்த்​தம்தான். அப்படியானால் priceless என்ற வார்த்தையும், worthless என்ற வார்த்தையும் ஒரே பொருளைத்தானே கொடுக்க வேண்டும்? அப்படி நினைத்துக் கொண்டு பெரிதும் மதிக்கும் ஒருவரிடம் “You are priceless to me” என்று கூறுவதற்குப் பதிலாக “You are worthless to me” என்று கூறி விடாதீர்கள்.

Priceless, worthless ஆகிய சொற்கள் நேரெதிர் அர்த்தங்களைக் கொடுக்கக் கூடியவை. Priceless என்பது மதிப்பிடமுடியாத என்ற பொருளைக் கொண்டது. ஒரு priceless பொருளை பொக்கிஷமாகப் பாதுகாப்போம். Worthless என்றால் மதி​ப்பில்லாத என்று பொருள். Useless, valueless போன்ற வார்த்தைகளுக்குச் சமமானது worthless.

ஒரு போட்டிக்குத் தயாரா? - கீழே 12 வார்த்தைகள் உள்ளன. அவற்றின் ஆங்கிலச் சொற்களை இரண்டிரண்டாக இணைத்தால் புதிதாக 6 சொற்கள் உருவாகும். எடுத்துக்காட்டு – பிறகு, மதியம் ஆகிய வார்த்தைகளுக்கான ஆங்கிலச் சொற்களை பொருத்தமாக இணைத்தால் கிடைப்பது AFTERNOON என்ற சொல். இதுபோல பிற 5 வார்த்தைகளையும் கண்டுபிடியுங்கள்.

சரியான விடைகளை எங்களுக்கு வந்து சேருமாறு மின்னஞ்சலில் அனுப்பும் முதல் ஐந்து வாசகர்களின் பெயர்கள் இந்தப் பகுதியில் பிரசுரிக்கப்படும். உங்கள் பெயர், நீங்கள் வசிக்கும் ஊர், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் (மாணவர், ஆசிரியர், ஓட்டுநர், ஐடி ஊழியர், மருத்துவர், குடும்பத்தலைவி, இப்படி..) போன்ற மூன்று விவரங்களும் தேவை.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in