

Virus என்பதன் பன்மைச் சொல்லாக viruses என்பது இருக்கிறது. ஆனால், bacterias என்ற சொல்லை நாம் பயன்படுத்துவதில்லையே ஏன்? - ஏனென்றால் bacteria என்பதே பன்மையைத்தான் குறிக்கிறது. Bacterium என்பது அதன் ஒருமை.
Binge watching என்பது என்ன? - Binge என்றால் மிகை. குறிப்பாகக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மிக அதிக அளவில் உண்ணும் காலம். Binge watching என்பது இடைவெளி விடாமல் அடுத்தடுத்து பல தொலைக்காட்சி எபிசோடுகளைப் பார்ப்பது (DVD மற்றும் OTT மூலம் இது சாத்தியப்படும்). எப்போதோ ஒரு முறை என்று இல்லாமல் இப்படிப் பார்ப்பதை வழக்கமாகவே கொண்டிருப்பதையும் இது உணர்த்துகிறது.
ஞாபக மறதியை dementia என்கிறார்களே, இந்த சொல் எதை அடிப்படையாகக் கொண்டது? - லத்தீன் மொழியில் de என்பது ஒன்று இல்லாததைக் குறிக்கிறது. Ment என்பது மனதைக் (நினைவைக்) குறிக்கிறது. Ia என்பது ஒரு நிலையைக் குறிக்கிறது. மனம்/நினைவு(கட்டுப்பாட்டில்) இல்லாத நிலை dementia. Dementia என்பது (யாருக்குமே அவ்வப்போது ஏற்படக்கூடிய) ஞாபக மறதி அல்ல. இது இயல்பான வயது முதிர்ச்சியினால் ஏற்படுவதும் அல்ல.
பக்கவாதம், அல்ஸைமர் நோய் போன்ற காரணங்களால் உண்டாவது. பேசும்போது சொற்களைத் தெரிவு செய்வதில் சிரமம் என்பதிலிருந்து குடும்ப உறுப்பினர்களையே அடையாளம் காண முடியாமல் போவதுவரை இதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஒரு சிறுவன் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டிருந்தான். அவனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த அவன் தாய் ‘இந்த ஸ்டன்ட் எல்லாம் என்னிடம் வேண்டாம்’ என்று கூறியதைக் கேட்டேன். Stunt என்றால் சண்டைதானே?
ஆபத்தான துணிகரமான சண்டைக் காட்சிகளை stunt scenes என்று நாம் கூறுவதுண்டு. பிறர் கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்யப்படும் தந்திரத்தைக்கூட stunt என்ற சொல் குறிக்கும். தான் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டதும். “என்னடா கண்ணா? உடம்பு சரி இல்லையா? இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவு போட்டுடறியா?” என்று அம்மா சொல்வார் என்று அந்தச் சிறுவன் எதிர்பார்த்திருக்கக்கூடும். அம்மாவுக்கு இந்த stunt புரிந்து விட்டது.
Parapet wall என்பது வீட்டின் எந்தப் பகுதியிலும் இருக்கக்கூடிய சுவர்? - Parapet (wall என்ற வால் தேவையில்லை) பெரும்பாலும் மொட்டை மாடி, பால்கனிகளில்தான் இருக்கும். கைப்பிடிச்சுவர். குட்டிச்சுவர் என்பது பாழடைந்த ஒன்று. பேச்சு வழக்கில் அதையும் parapet என்கிறார்கள்.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com