

You are very gutsy என்று ஒருவரைப் பாராட்டினால் அது பாராட்டப்படுபவரின் தைரியத்தைக் குறிக்கிறதா அல்லது அசட்டுத் துணிச்சலைக் குறிக்கிறதா? தைரியம்தான். என்றாலும் தைரி யமாக இப்படிப் பாராட்டுங்கள் என்று கூற கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. காரணம் ‘பேராசை கொண்ட’ என்கிற பொருளையும் gutsy குறிக்கிறது.
****
Mule accounts என்று ஓர் ஆங்கில நூலில் படித்தேன். இதன் பொருள் என்ன? கழுதை, குதிரை ஆகிய இரண்டுக்குமாகப் பிறந்த விலங்கை mule என்பார்கள். இந்த விலங்கு நிறையப் பொதி சுமக்கும். Mule accounts என்பவை குற்றவாளிகள் தங்கள் பணத்தைச் சட்ட மீறலான வழியில் பகிர்ந்துகொள்வதற்குப் பயன்படும் கணக்குகள். இதை சம்பந்தப் பட்டவர்கள் அறியாமல்கூட இருப்பார்கள். உதாரணமாக, கறுப்புப் பணத்தைச் சிலர் தங்களுக்குத் தெரிந்தவரின் கணக்குக்கு அனுப்புவார்கள். அவர் அதைத் தனக்குத் தெரிந்த வேறொருவரின் கணக்குக்கு அனுப்புவார். பின்னர் அந்தப் பணம் முதல் நபருக்கு வந்து சேரும். இப்படிப் பலரிடம் கைமாறுவதால் அதன் மூலத்தைக் கண்டுபிடிப்பது கடினமாகிவிடும். கிரிமினல்கள் இதற்காக ஒரு சிறிய தொகையை muleக்கு அளிப்பதுண்டு. மாட்டிக் கொண்டால் அந்த mule தானே அதற்கான பழியை ஏற்றுக் கொள்வ துண்டு.
Mules எனும் விலங்குகள் பெரும் சுமையையும் சுமக்கும். எந்த விதத்திலும் சுணங்காமல் சுமக்கும். சுமையை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்ல அது ஒரு கருவியாகப் பயன்படுகிறது. ஆக, இந்தத் தன்மைகள் எல்லாம் கொண்ட வங்கிக் கணக்குகளை mule accounts என்பார்கள்.
****
Quack என்பது அனுபவமற்றவரைக் குறிக்கிறதா அல்லது ஏதோ ஒரு துறையில் உள்ள ஏமாற்றுக்காரரைக் குறிக்கிறதா? இத்தகைய நபர்களுக்கும் வாத்திடம் இருந்து எழக்கூடிய ஒலியான quack என்பதற்கும் சம்பந்தம் உண்டா? வாத்து எழுப்பும் quack quack (க்வாக் க்வாக்) என்பதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை.
போலி பொறியாளர், போலி கட்டிடக்கலைஞர் ஆகியோரைக் குறிக்க quack என்ற சொல் பயன்படுத்தப்படுவதில்லை. போலி மருத்துவரை மட்டுமே குறிக்கும் சொல் அது. டச்சு மொழியில் kwakzalver என்பது போலி மருந்துகளை விற்கும் நபரைக் குறிக்கும் சொல். காலப்போக்கில் நேர்மையற்ற, தகுதியற்ற மருத்துவர் களைக் குறிப்பதற்கு அந்தச் சொல் பயன்பட்டு வருகிறது.
கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.