You are very funny என்பது உருவ கேலியா? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 123

You are very funny என்பது உருவ கேலியா? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 123
Updated on
1 min read

‘கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணி செந்தில் நகைச்சுவைக் காட்சி two bananas சம்பந்தப்பட்டதா அல்லது two plantains சம்பந்தப்பட்டதா?

Two bananas சம்பந்தப்பட்டது என்பது மேலும் பொருத்தம். Plantain tree, plantain leaf என்று வாழை மரம், வாழை இலையைக் கூறுவோம். ஆனால், வாழைப்பழத்தைக் குறிக்க banana எனச் சொல்வதுதான் வழக்கம்.

பொதுவாக a என்ற எழுத்தில் முடியும் ஆங்கிலச் சொற்கள் மிக அரிது.

A மட்டுமல்ல ​i, u ஆகிய vowelsஇல் முடியும் வார்த்தைகள்கூட மிக அரிதானவை. அப்படி வந்தாலும் அவை பெரும்பாலும் வேற்று மொழியிலிருந்து வந்தவையாக இருக்கும்.

Banana என்பதுகூட மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதியான சொல் என்பார்கள். அது போர்த்துகீசிய மொழியை அடைந்து அங்கிருந்து ஆங்கிலத்துக்குக் கடத்தப்பட்டது.

Pindrop silence என்பதை மயான அமைதி என்று கூறலாமா?

சத்தமும் பேச்சும் இல்லாமல் நிலவும் அமைதியை மயான அமைதி என்கிறோம். “பெரும் கலவரத்துக்குப் பிறகு நகரில் மயான அமைதி நிலவியது” எனக் கூறுவதுண்டு. அதுவே, ‘குண்டூசி விழுந்தால் அதன் ஒலி கூடக் கேட்கும் அளவுக்கு அமைதி’ என்பதை pindrop silence என்பதன் மூலம் விளக்குகிறோம். ஒரு குண்டூசி தரையில் விழுந்தால் ஒலி எழும்புமா என்பவர்களுக்கு முணுமுணுப்பதை 30 டெஸிபல் அளவு எனலாம். வழக்கமான பேச்சு என்பது 60 டெசிபல். மோட்டார்பைக் எஞ்ஜின் ஒலி 95 டெசிபல். ஒரு குண்டூசி தரையில் விழுந்தால் அதனால் எழும்பும் ஒலி அளவு 15 டெசிபல் என்கிறார்கள்.

​Pindrop ஒரு புறம் இருக்கட்டும். Meldrop என்கிற சொல் தெரியுமா? மூக்கின் நுனியில் சளித்துளி காணப்பட்டால் அதை இப்படிக் குறிப்பிடுவார்கள்.

You are very funny என்று ஒருவர் குறிப்பிட்டால் அது நம் தோற்றத்தை அவமதிக்கும் போக்கா?

அதாவது பார்த்தாலே சிரிக்கும்படி உங்கள் தோற்றம் இருக்கிறது என்ற பொருளில் அவர் You are funny என்று குறிப்பிட்டு இருப்பாரோ என எண்ணுகிறீர்கள். தோற்றத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. நீங்கள் ஜாலியானவர், உற்சாகமானவர் என்பதைக் குறிக்கும் வாக்கியம் அது.
ஆனால், முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டோ எரிச்சலாகவோ ஒருவர் அந்த வாக்கியத்தைச் சொன்னால் நீங்கள் சூழலுக்குப் பொருந்தாதபடி நடந்து கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in