

தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு 2025 திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. மாநிலக் கல்விக் கொள்கை வெளிவந்ததில் தொடங்கி கல்வி உதவித் தொகை விரிவாக்கம் வரை இந்த ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது:
மாநிலக் கல்விக் கொள்கை: தமிழ்நாட்டுக்குரிய பிரத்தியேக மாநிலக் கல்விக் கொள்கை 600 பக்கங்களில் வடிவமைக்கப்பட்டது. இதில் 10 தலைப்புகளின்
கீழ் 76 பக்க அளவில் பள்ளிக் கல்வி குறித்த அம்சங்கள் நிறைந்த பள்ளிக் கல்விக் கொள்கை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இருமொழிக் கொள்கை உறுதி செய்யப்பட்டது.
டிஜிட்டல் கல்வியும் லேப்டாப் விவகாரமும்: எதிர்கால உயர் தொழில்நுட்பத் திறன்களை வளர்க்கும் வகையில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ரோபாட்டிக்ஸ், கோடிங் உள்ளிட்ட டிஜிட்டல் கல்வியைப் பயிற்றுவிக்கும் ‘டிஎன் ஸ்பார்க்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது வெகுவாகப் பாராட்டப் பட்டாலும், பிளஸ் 2 பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த விலை யில்லா மடிக்கணினிகளை வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது ஏன் என்கிற கேள்வி வலுத்தது. கடந்த 2011 முதல் 2019வரை ரூ.7, 257.61 கோடி மதிப்புள்ள 51.67 லட்சம் மடிக்கணினிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப் பட்டன. ஆனால், கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்தத் திட்டம் பின்னர் தொடங்கப்படவில்லை.
தேசிய விருது: கல்வி நலத்திட்டங்கள், சீருடைகள், பாடப்புத்தகங்கள் போன்றவற்றை மாணவர்கள் பெறுவதை எளிதாக்கும் நோக்கில் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில், 78 லட்சம் மாணவர்களுக்குப் பள்ளிகளிலேயே ஆதார் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதற்காக தமிழகப் பள்ளிக்கல்வித் துறைக்குத் 2025இல் தேசிய விருது கிடைத்தது.
வாசிப்பு இயக்கம், வாரம்: சிறாரைப் படைப்பாளி ஆக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘வாசிப்பு இயக்கம்’ திட்டத்தின்கீழ் மூன்றாம் கட்டமாக மாணவர்களே எழுதிய 24 கதைப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தங்கள் வீடு, குடும்பம், அன்றாட அனுபவங்களைக் கற்பனை கலந்து அரசுப் பள்ளி மாணவ - மாணவியர் எழுதிய எளிய அழகிய கதைகள் இவை.
சிறார் இயற்றிய கதைகளைப் பிற மாணவர்களும் ரசித்துப் படிக்கும் வகையில் அவை அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி நூலகங்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டன. இந்நூல்களை அனைத்து மாணவர்களும் படித்து வாசிப்பில் நேசம் கொள்ள, ‘வாசிப்பு வாரம்’ நடைமுறைப்படுத்தப்பட்டது.
கால்குலேட்டர் அனுமதி: அரசுப் பள்ளி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையைப் பள்ளிக் கல்வித் துறை ஏற்று, பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணக்குப் பதிவியல் பாடத்தில் கால்குலேட்டர் பயன் படுத்த கடந்த நவம்பரில் அனுமதி வழங்கியது.
‘ப’ வகுப்பறை: வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையில் பின்வரிசை, முன்வரிசை என்கிற பாகுபாட்டைக் களைய கேரளம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ‘கடைசி பெஞ்ச்’ அகற்றப்பட்டது.
இதையடுத்து, ஒரு சாரார் மாணவர்களை ஒதுக்கும் போக்கில் சீர்திருத்தம் கொண்டுவர ‘ப’ வடிவ வகுப்பறைகள் அமைக்கும் வழிகாட்டுதலைத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. அப்போது, மாநிலம் முழுவதும் இதைச் சாத்தியப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சவால்கள் பரவலாக விவாதிக்கப் பட்டன.
விளையாட்டு, உதவித் தொகை: பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறமை களைக் கண்டறிந்து ஊக்குவிக்க, ‘சி.எம்.கோப்பை 2025’ விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடத்தப்பட்டன. அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களான ‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ ஆகியவை விரிவுபடுத்தப்பட்டன.
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் சாதனைகளைக் கொண்டாடும் விழாவாக ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நடத்தப்பட்டது. இதில் 'நான் முதல்வன்', 'புதுமைப் பெண்', ' தமிழ்ப் புதல்வன்' போன்ற திட்டங்களின் பயனாளிகள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
பொதுத் தேர்வு ரத்து: பிளஸ் 1 பொதுத் தேர்வை ரத்து செய்யும் அறிவிப்பு விமர்சிக்கப்பட்டது. உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை வெல்ல, பட்டப்படிப்பை மேற்கொள்ள அவசியமான அடித்தளமாக பிளஸ் 1 பாடம் இருப்பதால் ரத்து நடவடிக்கையைத் திரும்பப்பெற வேண்டுமென ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பலர் வலியுறுத்தினர்.
கற்றல் திறன்: கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைக்க அமல்படுத்தப் பட்ட ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் மாநிலக் கல்விக் கொள்கையில் இடம்வகித்தது. இந்தத் திட்டம் தொடக்கநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பயனளிப்பதாகச் சொல்லப்பட்டது.
இடைநிலை வகுப்புகளான 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் இடை வெளியைக் குறைக்கவும் தமிழ், ஆங்கிலம், கணிதத் திறனை மேம்படுத்தவும் தொழிற்கல்வி வாய்ப்புகளை வழங்கவும் ‘திறன் திட்டம் 2025’ தொடங்கப்பட்டது. 21ஆம் நூற்றாண்டின் திறன்களை மாணவச் சமூகத்தினர் பெற்று உலக அளவிலான சவால்களை எதிர் கொள்ளத் தயார்படுத்தும், ‘ஸ்டீம்’ (STEAM) போன்ற திட்டங்கள் பரவலான வரவேற்பு பெற்றன.
உணவு, நீர்: பசியைப் போக்கி, வருகைப் பதிவை அதிகரித்து, கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டது ‘காலை உணவுத் திட்டம்’. நகர்ப்புறங்களில் உள்ள 2,430 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு இந்தத் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் விரிவுபடுத்தப்பட்டது. வளரிளம் பருவத்தினருக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு எவ்வளவு இன்றியமையாததோ அதேபோன்று நீர்ச்சத்தும் அவசியமானது.
இதன் முக்கியத்துவத்தை மருத்துவ ரீதியில் உணர்ந்து, பள்ளிகளில் ஒலி எழுப்பி மாணவர்கள் தண்ணீர் பருக நினைவூட்டும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கடந்த ஜூன் இறுதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே இந்தத் திட்டத்தை கேரளம், கர்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் தங்கள் அரசுப் பள்ளிகளில் பின்பற்றி வருகின்றன.
- susithra.m@hindutamil.co.in