

தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமத்துப் பள்ளியில், ஆறாம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆங்கில பாடப்புத்தகத்தைப் புரட்டுகிறார். அங்கு அவருக்காகக் காத்திருப்பது மொழியல்ல; அவரது புரிதல் திறனுக்குச் சற்றும் தொடர்பில்லாத கடினமான வாக்கியங்களும் புதிய கலைச்சொற்களும்.
பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளியிலும், பிறகு மூன்றாண்டுகள் கல்லூரியிலும் ஆங்கிலத்தைப் பாடமாகப் படித்தும், ஒரு நேர்காணலில் தன்னம்பிக்கையுடன் இரண்டு வாக்கியங்கள் பேச முடியாமல் இளைஞர்கள் தடுமாறுவது ஏன்? மொழியை முதலில் கேட்டு, பிறகு பேசி, அதன் பின்பே வாசிக்கவும் எழுதவும் குழந்தை கற்கிறது.
இதுவே இயற்கை. ஆனால், நமது பாடத்திட்டம் இந்த வரிசையைத் தலைகீழாக மாற்றிவிட்டது. கேட்டல், பேசுதல் என்கிற அடிப்படைகளைப் புறக்கணித்துவிட்டு, தகவல்களைத் தெரிந்துகொள்ளுதல், 'மனப்பாடம் செய்து எழுதுவதை' மொழிக் கல்வியாகக் கருதுகிறோம். வகுப்பறைக்கு வெளியே ஆங்கிலம் பேச வாய்ப்பில்லாத மாணவருக்கு, கணிதச் சூத்திரங்களைப் போல ஆங்கிலத்தை மாற்றியதுதான் முதல் தவறு.
நான்கு ரகசியங்கள்
இன்றைய பாடப்புத்தகங்கள் ஆங்கிலம் கற்பிக்கின்றனவா அல்லது அறிவியல், சமூக அறிவியல் கருத்து களை, வரலாற்றுத் தகவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் திணிக்கின்றனவா? ஆறாம் வகுப்புப் புத்தகத்தில் ‘கடல் ஆமைகள்' பற்றி நான்கு பக்கங்களுக்கு ஒரு பாடம் இருக்கிறது. ஆனால், அதில் உள்ள வாக்கியங்களும் சொற்களும் ஒரு பட்டதாரி படிக்கும் தரத்திலானது.
இங்குதான் கிளைவ் ஆக்ஸென்டன் எழுதிய ‘Oxford New English File' சர்வதேச ஆங்கிலம் கற்பிக்கும் புத்தகத் தொகுப்பு காட்டும் நான்கு ரகசியங்களை உற்றுநோக்க வேண்டும்:
1 இலக்கணமும் பாடமும்: இலக்கணம் தனியானது அல்ல; எளிய வாக்கியங்களில் தொடங்கி, மாணவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களை எளிய வாக்கிய அமைப்புகளுக்கு நகர்த்தும் நுட்பம் பாடத்தின் ஊடாகவே கலந்திருத்தல்.
2 சுய மதிப்பீடு: ஒவ்வொரு பாடத்தின் பின்னும் மாணவர்கள் தாங்களே சரி பார்த்துக்கொள்ளும் எளிய பேச்சுப்பயிற்சிகள், எழுத்துப் பயிற்சிகள் ‘எனக்குத் தெரியும்' என்கிற நம்பிக் கையை அவர்களுக்கு விதைக்கின்றன.
3 வயதுக்கு ஏற்ற நடை: மாண வர்களின் முதிர்ச்சிக்கு ஏற்பச் சொற்களும் வாக்கிய அமைப்புகளும் கையாளப்படுவது.
4 நடைமுறை ஆங்கிலம்: அன்றாட வாழ்க்கையில் பேசத் தேவையான ஆங்கிலமே பாடத்தின் உள்ளடக்கம்.
ஐந்து வழிகாட்டுதல்கள் தமிழக பள்ளிக் கல்வித் துறை இனியும் காலம் தாழ்த்தாமல் பின்வரும் மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும்:
1 சர்வதேசக் கூட்டணியுடன் புதிய பாடப்புத்தகங்கள்: ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், மேக்மில்லன் போன்ற உலகத் தரம் வாய்ந்த பதிப்பகங்களுடன் இணைந்து, தமிழக மாணவர்களுக்கு எனப் பிரத்யேக பாடப்புத்தகங்களை உருவாக்க வேண்டும்.
2 எளிமைப்படுத்தப்பட்ட பாடங்கள்: எந்தப் பாடமும் ‘இரண்டு பக்கங் களுக்கு' மேல் இருக்கக் கூடாது. நீண்ட பாடங்கள் மாணவர்களுக்குச் சோர்வையே தரும். மாணவர்களின் அன்றாட சமூகச் சூழலோடு தொடர் புடைய கதைகளில் தொடங்கி, 'சிறுகச் சிறுக மேம்படுத்துதல்' (little by little excellence) என்கிற நோக்கில் மொழியின் ஆழத்திற்கு இட்டுச்செல்ல வேண்டும்.
3 தேர்வு, மதிப்பீட்டில் புரட்சி: ஆங்கி லத்தை ஐந்து பாடங்களில் ஒன்றாக வைப்பதைத் தவிர்த்து, கல்லூரிகளைப் போல மூன்று பகுதிகளாக (தமிழ், ஆங்கிலம், இதர பாடங்கள்) பிரிக்க வேண்டும். மதிப்பீட்டில் எழுத்துத் தேர்வுக்கு அளிக்கும் முக்கியத்துவத் தைக் குறைத்து; வாய்மொழி (Oral), கேட்டல் (Listening), புரிதல் திறனுக்கு (Comprehension) குறைந்தது 70 சதவீத மதிப்பெண் வழங்கலாம்.
4 பிரத்யேக ‘டிஜிட்டல் ஹப்' (Exclu sive Digital Hub): வகுப்பறைக்கு வெளியே கற்றலை நீட்டிக்க, தமிழக மாணவர்களுக்கு ஏற்ப ஒரு தனித் துவமான இணையதளத்தை அரசு உரு வாக்க வேண்டும். அதில் காணொளிகள், ஒலிக் கோப்புகள், உச்சரிப்பைப் பரிசோதிக்கும் வசதிகள், கதைகள் மூலம் மாணவர்கள் சுயமாகக் கற்கும் சூழலை உருவாக்க வேண்டும்.
5 உலகத் தரம் வாய்ந்த ஆசிரியர் பயிற்சி, கையேடு: ஆசிரியர்களுக்கு சர்வதேசத் தரத்திலான தொடர் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இதனுடன், ஒவ்வொரு பாடத்தையும் எப்படி அணுக வேண்டும் என்பதற்கான விரிவான ஆசிரியர் கையேடு (Teacher's Guide) கட்டாயம் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர் தவறு செய்யும் மாணவரைத் திருத்தும் ‘அதிகாரி'யாக இல்லாமல், ஊக்குவிக்கும் ‘வழிகாட்டி’யாக மாற வேண்டும்.
ஆங்கிலம் வெறும் ‘பாட’மாக இருந் தால் போதாது; அது மாணவர்களின் ‘திற’னாக மாற வேண்டும். கருத்து களையும் அறிவையும் ஆங்கிலப் புத்தகத்தில் திணிப்பதை விடுத்து, எளிய நடைமுறைக்கு மாறுவோம். பாடச் சுமையைக் குறைப்போம்; மொழியின் சுவையைக் கூட்டுவோம்.
ஆங்கிலம் என்பது அறிவல்ல, அது அறிவைப் பெறுவதற்கான கருவி. அந்தத் திறவுகோல் கிராமத்துப் பள்ளியில் படிக்கும் மாணவ
ருக்கும் எளிதாகக் கிடைக் கட்டும்! அப்போதுதான், அந்த வகுப்பறையிலிருந்து உலகத் தோடு தன்னம்பிக்கையுடன் உரையாடும் புதிய தலை முறை ஒரு நாள் உருவாகும்.
- கட்டுரையாளர்: ச.அருண்குமார், குழந்தைகள் வள செயல்பாட்டாளர், மதுரை சீடு கல்வி மையம்; maduraiseed1999@gmail.com