

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சென்னை, கோவை, திருச்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் 200 இடங்களில் பகுதி பகுதியாக ‘நிலா திருவிழா 200’ நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் உள்ளிட்டவை இணைந்து நடத்தி வருகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களை வானியலில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் சந்தித்து பூமியின் இயற்கை துணைக்கோளான நிலா மற்றும் வியாழன், வெள்ளி உள்ளிட்ட கோள்களை அதிநவீன தொலைநோக்கி மூலமாக காண்பித்து அறிவியல் உண்மைகளை விளக்குகிறார்கள்.
நிச்சயம் இத்தகைய நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடத்தப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக அறிவியல் துறை சார்ந்த விஷயங்களை கற்றுக் கொடுப்பதற்கு முன்பாக அறிவியல் சிந்தனைக்கான அடித்தளம் அமைக்க வேண்டும்.
அதென்ன அறிவியல் சிந்தனை? தத்துவ அறிஞர், கணிதவியலாளர், கல்வியாளர், அரசியலர், பொருளியலாளர், எழுத்தாளர் என பன்முக ஆளுமையாக விளங்கியவர் பெர்ட்ரண்டு ரசல். 1931-ல் இவர் எழுதிய ‘தி சயின்டிஃபிக் அவுட்லுக்’ புத்தகத்தில் இதற்கான விடை உள்ளது.
ஒரு நிகழ்வை அறிவியல் கோட்பாடாகக் கருத வேண்டுமானால் சோதனைக்கு உட்படுத்துதல், நிரூபணங்களைத் தேடுதல், நிரூபிக்கப்பட்ட உண்மையை மறு ஆய்வுக்கு உட்படுத்துதல் ஆகிய மூன்று கட்டங்கள் அடிப்படை என்று வலியுறுத்தினார் ரசல். இதுவே அறிவியல் சிந்தனைக்கான அடித்தளம் என்கிறார்.
உண்மைதான்! கேட்பதை, பார்ப்பதை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடாமல் அவற்றில் மெய்ப்பொருள் காண்பதே அறிவு மற்றும் அறிவியல் சிந்தனைக்கான அடித்தளமாகும்.