

கைப்பாவை கலை மூலம் 40 ஆண்டுகளாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திய மீனா நாயக்கிற்கு இந்திய அரசு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கி கவுரவித்திருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மீனா நாயக். கைப்பாவை கலை பிரபலமடையாத காலகட்டத்திலேயே மும்பை பல்கலைக்கழகத்தில் அதற்கென பாடப்பிரிவை உருவாக்கினார்.
ராஜஸ்தானின் பாரம்பரிய கத்புட்லிஸ், ஆந்திராவின் ஆறடி பொம்மை கூத்து, கர்நாடகத்தின் தோல்பாவை கூத்து, ஜப்பானிய பன்ரக்கு கலை ஆகியவற்றின் தொன்மத்தையும் வரலாற்றையும் முறைப்படுத்திப் பாடப்பிரிவில் இணைத்தார்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலில் 1970களில் கை பொம்மை கதாபாத்திரங்களை வடிவமைத்து கேஸ் சிலின்ட்ரை பயன்படுத்துவது எப்படி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினார். ஆனால், திருமணத்துக்குப் பிறகு தனது மருமகள் தொலைக்காட்சியில் தோன்றுவதில் மீனாவின் மாமியாருக்கு ஒப்புதல் இல்லை.
அத்தகைய சமயத்தில்தான் ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கைபொம்மை கலை மூலமாக ஏற்படுத்தும் திட்டம் மீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை ஏற்று செய்தார்.
மருத்துவர்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கியவற்றை பொம்மை கலைஞரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படுத்தினர். அதிலிருந்து உத்வேகம் பெற்று குழந்தைகளின் உரிமைகள் யாவை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்கும் வழிகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதைத் தனது வாழ்நாள் இலக்காக்கிக் கொண்ட பொம்மை கலைஞர் மீனா நாயக் கைபொம்மை கலை வெறும் பொழுதுபோக்கு அல்ல என்று நிரூபித்துள்ளார்.