

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை விடவும் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளில்கரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்படுவதற்கு முன்பு காய்ச்சல் தீவிரமடைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர். பின்னர் இரண்டு தவணைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
இருப்பினும் ஒருமுறை கரோனா காய்ச்சல் வந்துவிட்டால் எதிர்ப்புசக்தி மிகவும் குறைந்துவிடும் என்றும், அதனால் மீண்டும் தொற்று ஏற்படக் கூடும் என்றும் பரவலாக அஞ்சப்படுகிறது. கரோனா வந்த பிறகு உடற்சோர்வு, சளி, இருமல், மூச்சு வாங்குதல் உள்ளிட்டவை சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் அடிக்கடி ஏற்படுவதாகவும் நம்பப்படுகிறது.
இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் கூடுதல் எதிர்ப்புசக்தியுடன் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது நிச்சயம் ஆசுவாசம் அளிக்கும் செய்தியாகும். அதிலும் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை விடவும் இவர்களுக்கு அதிகப்படியான எதிர்ப்புசக்தி இருப்பதாக அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் 19 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை லான்செட் ஆய்விதழில் வெளியிட்டுள்ளனர்.
எதுவாக இருப்பினும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆகையால், 12 வயது குழந்தைகள் தொடங்கி அனைவரும் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொள்வதென உறுதி ஏற்போம் நலமுடன் வாழ்வோம்.