

கல்வி உரிமைச் சட்டத்தை தனியார் பள்ளிகளில் பின்பற்றுவது பற்றி பரிசீலிப்போம் என்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஆதரவற்றோர், குழந்தைத் தொழிலாளர், எச்.ஐ.வி. பாதித்தவர், பட்டியலினத்தவர், மனவளர்ச்சி குன்றியவர் உள்ளிட்ட அடிப்படையில் நலிவடைந்தோராகக் கருதப்படும் குழந்தைகளுக்குக் கட்டாய இலவசக் கல்வியானது அனைத்து தனியார் பள்ளிகளிலும் வழங்கிட கல்வி உரிமைச் சட்டம் 2012-ல் நடைமுறைக்கு வந்தது.
இதன்படி தமிழ்நாட்டில் உள்ள 11,335 தனியார் பள்ளிகளில் படிக்கக் கூடிய குழந்தைகளில் 25 சதவீதத்தினருக்கு இலவச கல்வி வழங்கிட ஆண்டுதோறும் ரூ.400 கோடி தமிழ்நாடு அரசு வழங்குகிறது. இச்சட்டத்தின்கீழ் 2023-24 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு மார்ச் 20-ல் தொடங்கவிருக்கிறது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுக்கு அரசு வழங்க வேண்டிய நிதி நிலுவையில் இருப்பதால் இனியும் இந்த சட்டத்தை பின்பற்றுவதா என்று தாங்கள் பரிசீலனை செய்வதாக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மறுபுறம் அரசு நிதி வந்து சேராததால் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற்றுவரும் நலிவடைந்த குழந்தைகள் கட்டணம் செலுத்தும்படி பள்ளி நிர்வாகம் அழுத்தம் தருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையில், ஆண்டுதோறும் ரூ. 400 கோடியை தனியார் பள்ளிகளுக்கு அரசு தாரைவார்ப்பதற்குப் பதிலாக அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு அத்தொகையை செலவிட வேண்டும் என்ற கல்வி செயற்பாட்டாளர்களின் கருத்திலும் நியாயம் உள்ளது. அரசு பள்ளிக்கு நிதி அளிப்பதே நீதி.