

காலநிலை மாற்றத்தால் உலக அளவில் தீவிர பாதிப்புக்கு உள்ளாகவிருக்கும் 50 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டுவரும் ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று, மொத்த உள்நாட்டு பருவநிலை அபாயம் என்கிற தலைப்பில் அண்மையில் ஆய்வு நடத்தியது.
2050-க்குள் காலநிலை மாற்றத்தினால் நேரடி பாதிப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ள மாநிலங்கள் எவை என்கிற கோணத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உலக நாடுகளைச் சேர்ந்த 2,600 மாநிலங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிகம் வளர்ச்சி அடைந்திருக்கும் மாநிலங்கள் கூடுதல் ஆபத்தில் இருப்பது இதில் தெரியவந்தது.
மோசமான பருவநிலையால் வெள்ளப்பெருக்கு, கடல் மட்டம் உயர்தல், காட்டுத் தீ பரவல் போன்றவை ஏற்படுவதும்; இவற்றின் விளைவாக நகர்ப்புற கட்டுமானங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்த வகையில் சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய மூன்று தேசங்கள்தான் 2050-க்குள் பெருத்த சேதமடையும் அபாயத்தில் உள்ளனவாம்.
அதிலும் இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்கள் பேராபத்தில் உள்ளனவாம். காலநிலை மாற்றத்தை எதிர்த்து தாக்குப்பிடிக்கும் விதமாக இந்தியாவின் கடற்கரை நகரங்களின் துறைமுகங்கள் இல்லை என்கிறது இந்த ஆய்வு. அப்படியானால் மாநிலத்தின் தலைநகரம் உள்பட அனைத்து கடற்கரை ஊர்களையும் அதன் மக்களையும், இயற்கை வளத்தையும் இயற்கை சீற்றத்திடமிருந்து காக்க தமிழ்நாடு அரசு அனைத்து திட்டங்களையும் சூழலியல் நோக்கில் சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.