

ஆக்கிரமிப்பினால் பாழ்பட்டிருந்த சென்னை சிட்லபாக்கம் குளத்தை அப்பகுதி வாழ் மக்கள் தூர்வாரி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
தென்சென்னையில் உள்ள சிட்லபாக்கம் பகுதியின் ‘நல்ல தண்ணீர் குளம்’ என்று கடந்த 200 ஆண்டுகளாகப் பெயர்பெற்றது சிட்லபாக்கம் குளம். ஆனால், சென்னையின் மற்ற நீர்நிலை பகுதிகளை பொதுமக்கள் ஆக்கிரமித்துக் குடியேறியது போல சிட்லபாக்கம் குளத்துக்கு நீர் வரத்து உள்ள வழித்தடங்களையும் முறைகேடாக ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் படிப்படியாகக் குளம் வற்றிப் போனது. இந்நிலையில், தாங்கள் இழைத்த வரலாற்றுப் பிழையை தாங்களே நேர் செய்ய முடிவெடுத்து சிட்லபாக்கம் வாசிகள் அதன் பஞ்சாயத்து வார்டு தலைவருடன் கலந்து பேசினர். குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றும், தனியார் நிறுவனம் ஒன்றும் கைகோர்த்தன.
சிட்லபாக்கம் முழுவதும் உள்ள குடியிருப்புகளில் நிலத்தடி நீர் சுரக்க மூலாதாரமாகத் திகழ்வது இந்த குளம்தான் என்பது புனரமைப்பு பணியில் ஈடுபட்டபோது புரியவந்தது. அதுவரை ஆறு அடி ஆழம் இருந்த குளம் 12 ஆடி ஆழத்துக்குத் தூர்வாரப்பட்டு 9 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு ஏற்படுத்தப்பட்டது.
ஆக்கிரமிப்பை தடுக்க நீர் வழித்தடங்களில் சுவர்கள்எழுப்பப்பட்டன. சுற்றுச்சூழலுக்கு உகந்த செங்கற்கள்கொண்டு குளத்துக்கு மதில் சுவரும், நடைபாதையும் கட்டப்பட்டன. 24 சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டன, சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இப்படிதாம் செய்த பிழையை தாமே திருத்தி உள்ளனர் சிட்லபாக்கம் மக்கள்.