

குழந்தைகளைத் தாக்கக் கூடிய டிபி நோயை கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சிறப்பு முகக்கவசம் கண்டுபிடித்துள்ளனர்.
நுரையீரலை தீவிரமாகத் தாக்குவதில் கரோனா பெருந்தொற்றை காட்டிலும் டிபி எனப்படும் காசநோய் ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். உலக சுகாதார அமைப்பின்படி 40 சதவீத இந்தியர்களுக்கு டிபி அறிகுறி உள்ளதாம். அது பின்னாளில் டிபி நோயாக மாறும் அபாயமும் உள்ளதாம். ஆகவேதான் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயற்ற இந்தியாவை உருவாக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
புகைப்பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட தீய பழக்கங்களால் நுரையீரல் பலவீனம் அடையும்போது மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் நுண்கிருமி எளிதில் தாக்கி டிபி ஏற்படக் கூடும். இதுதவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் எதிர்ப்பு சக்தி குறைந்து இந்தியாவில் லட்சக்கணக்கானோருக்கு டிபி பரவுகிறது. சத்து இல்லாமல் டிபியால் அதிகம் பாதிப்படைபவர்களாக குழந்தைகளே உள்ளனர். இரண்டு வாரங்களுக்கு மேல் சளியுடன் கூடிய இருமல், உடல் எடை குறைதல், ரத்தம் கலந்த சளி உள்ளிட்ட அறிகுறி தென்படும்போதே மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்பட்சத்தில் நிச்சயம் குணப்படுத்த முடியும். ஆனால், பல சமயங்களில் அவ்வாறு சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில்லை. இந்நிலையில், குழந்தைகளைத் தாக்கும் டிபியை துல்லியமாகக் கண்டறியக் கூடிய சிறப்பு என் -95 முகக்கவசத்தை மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இளையோரை காத்து காசநோயற்ற தேசமாக உருவாக இந்த புதிய கண்டுபிடிப்பு புதிய சுவாசம் கொடுக்கட்டும்.