

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் 4 மாணவிகள் காவிரி ஆற்றில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
சம்மந்தப்பட்ட பள்ளியில் 6,7-ம் வகுப்பு படிக்கும் 15 மாணவிகள், 2 ஆசிரியர்கள் ஆகியோர் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பங்கேற்க வேனில் சென்றுள்ளனர். விளையாட்டு போட்டிகளில் மகிழ்ச்சிப் பொங்க பங்கேற்ற சிறுமிகள் ஊர் திரும்ப புறப்பட்டுள்ளனர். வரும் வழியில் மாயனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இறங்கி அனைத்து சிறுமிகளும் குளிக்க ஆசிரியர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போது, ‘குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி’ என்ற எச்சரிக்கை பலகையை கவனிக்காமல் சிறுமிகள் இனியா, லாவண்யா, தமிழரசி, சோபியா அப்பகுதியில் இறங்கி குளித்துள்ளனர். கடைசியில் நான்கு பிஞ்சு உயிர்கள் பலியாகின.
வீட்டிலிருந்து துள்ளிக்குதித்து படிக்கவும் விளையாடவும் சென்ற குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோரும் ஊர் மக்களும் கொந்தளித்து பள்ளியை முற்றுகையிட்டுப் போராடவே பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட சம்மந்தப்பட்ட 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இது பிரச்சினையை தீர்த்துவிடாது.
நீச்சலும், ஆழத்தின் அபாயமும் தெரியாமல் ஆறு, குளம், ஆழ்கடலில் மாணவர்கள் சிக்கி மூழ்கி உயிரிழப்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு இல்லை. இனியேனும் பள்ளிகள் இது குறித்த விழிப்புணர்வை முறையாக ஏற்படுத்த வேண்டும்.