

மத்தியப் பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற ஜி-20 வேளாண் பிரதிநிதிகள் கூட்டத்தில் சிறுதானியங்களின் தூதராக பழங்குடி பெண் லஹரி பாய் பங்கேற்றுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் பூர்வக்குடி பைகா இனத்தைச் சேர்ந்தவர் லஹரி பாய். இவர் கடந்த 10 ஆண்டுகளாக தனது சுற்றுப்புற பகுதிகளில் விளையும் அரிய வகை சிறுதானியங்களின் விதைகளை சேகரித்து விவசாயம் செய்து வந்திருக்கிறார். குறிப்பாக தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதை மனதில் கொண்டு அரிசியை விடவும் மிகக் குறைந்த அளவிலான நீர் பாசனத்தில் விளையக் கூடிய சிறுதானியங்களின் விதைகளை பாதுகாத்துள்ளார்.
இதன் மூலம் 60 விதமான சிறுதானியங்களின் விதை களஞ்சியத்தை உருவாக்கியுள்ளார். அவற்றை 25 அக்கம் பக்கத்து கிராம விவசாயிகளுக்கு விநியோகித்து அவர்களும் சிறுதானியங்களை பயிரிட ஊக்குவித்து வருகிறார். இத்தனையும் செய்துவரும் லஹரி பாய்க்கு தற்போது வயது 27. அப்படியானால் 17 வயதில் இருந்து இத்தகைய அரும்பணியை அவர் முன்னெடுத்து வருகிறார்.
ஊட்டச்சத்து மிகுந்த வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட பலவிதமான சிறுதானியங்கள் இந்தியாவில் விளைகின்றன. அவற்றை சுவையாக சமைத்து சாப்பிட உதவும் ‘ஊட்டச்சத்து உணவு வகைகள்’ எனும் சமையல் குறிப்பு புத்தகத்தைக் கூட அரசு அண்மையில் வெளியிட்டது.
மாணவர்களே, நீங்கள் லஹரி பாய் போல சிறுதானியங்களின் தூதராக முடியாமல் போனாலும் பரவாயில்லை. எதிர்காலத்தின் பயிர்கள் என்றழைக்கப்படும் இந்த சிறுதானியங்களை உண்டு எதிர்காலத்தில் ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள்.