

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் பிளஸ் 2 படித்து வரும் மாணவ மாணவிகளில் 18,426 பேர் பள்ளியை விட்டு இடைநின்றுபோனது தெரியவந்துள்ளது. இவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 16,609 ஆகும். பொதுத்தேர்வு நெருங்கும் வேளையில் அதிர்ச்சிக்குரிய இச்செய்தி வெளியாகியுள்ளது.
கரோனா காலம் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கையில் கடும் நிதிச்சுமையை ஏற்படுத்தியதன் நீட்சியாக அக்குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களின் கல்வியையும் பந்தாடியது. குறிப்பாக இத்தகைய பின்புலத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த குழந்தைகளின் பெற்றோர் பலர் வாழ்வாதாரத்துக்காக சொந்த ஊருக்கு இடம்பெயர்ந்தனர்.
அவர்களில் பலர் பள்ளியில் மாற் றுச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு தங்களது குழந்தைகளை மேற் கொண்டு பிளஸ் 1-ல் சேர்க்காமல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்த்துவிட்டனர். 2022-23-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டுகளை விடவும் பலமடங்கு அதிகரித்திருப்பதே இதற்கு சாட்சி.
இதுதவிர பெரும் எண்ணிக்கையிலான 10-ம் வகுப்பில் இருந்த சிறார்கள் கரோனா காலத்தில் குழந்தை தொழிலாளர்களாக ஆக்கப்பட்டதை குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்கள் வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றனர். மறுபுறம் குழந்தைத் திருமணமும் நடந்தேறியுள்ளது.
இதற்கு இடையில் ஆடிபாடி விளையாடும் பதின்பருவத்தில் உள்ளவர்களை படி படி என ஒரே இடத்தில் முடக்குவதும் அவர்கள் கல்வியை வெறுத்து வெளியேற வைத்திருப்பதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புதுமை பெண் திட்டத்துக்கு இணையான புதிய திட்டத்தை மாணவர்களை மீட்க தீட்டுமா தமிழ்நாடு அரசு?