

இந்தியாவில் பனிமலைப் பகுதிகளில் உள்ள ஏரிகள் உடைந்து 30 லட்சம் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஞெகிழி பயன்பாடு, பெட்ரோல் போன்ற எரிப்பொருட்களை அளவுக்கு அதிகமாக உயயோகித்தல் உள்ளிட்ட சூழல் கேட்டை ஏற்படுத்தும் காரியங்களில் மனித இனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு பூமியின் வெப்பநிலை உயர்ந்துவருகிறது.
பனிமலைகள் உருகுவது, கனமழை பொழிவது, வெள்ளப்பெருக்கு ஏற்படுவது, கடல்மட்டம் உயர்வது போன்றவை உலகை உருக்குலைத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக பனிமலைப் பகுதிகளில் உள்ள பனி உருகி, பனி ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து அவை உடையும் நிலை அதிகரித்திருக்கிறது.
இத்தகைய பனி ஏரிகள் உடைவதால் பெருத்த சேதம் விளையும் ஆபத்தில் இந்தியா, பாகிஸ்தான், பெரு, சீனா ஆகிய நான்கு நாடுகள் இருப்பதாக ‘நேச்சர் கம்யூனிகேஷன்’ ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 30 லட்சம் மக்களுக்கு ஆபத்து என்றும், இது உலகிலேயே அதிகம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறு துளி பெரு வெள்ளம் என்பது நல்லது, கெட்டது இரண்டுக்குமே பொருந்தும். சிறுக சிறுக மனிதர்கள் இயற்கைக்கு செய்த தீமை இப்போது அவர்களையே விழுங்க காத்திருக்கிறது. இனியேனும் நாம் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழல் அக்கறையுடன் செயல்பட வேண்டும். ஏனெனில் மனித இனம் இன்றியும் இயற்கை நிலைத்திருக்கும், செழித்திருக்கும். ஆனால் இயற்கை இன்றி மனிதர்களால் வாழ முடியுமா?