

புதுமைப்பெண் திட்டத்தால் கடந்த ஆண்டைவிடவும் பெண்கள் உயர்கல்வி சேர்க்கை 27 சதவீதம் அதிகமாகி இருக்கிறது. புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசியவர், மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பெயர் எதற்காக புதுமைப்பெண் திட்டத்துக்கு சூட்டப்பட்டது என்பதை விளக்கினார்.
சிறுமியாக இருந்தபோது வறுமை காரணமாக பெற்றோரால் பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டவர் இராமாமிர்தம் அம்மையார். ஏழ்மையினால் விற்கப்பட்ட அந்த சிறுமிதான் இனி எந்த பெண் குழந்தைக்கும் தீங்கு நேரக் கூடாது என்று உறுதிபூண்டு பிற்காலத்தில் தந்தை பெரியாருடன் இணைந்து பெண் உரிமைக்காக போராடினார். அப்படிப்பட்ட இராமாமிர்தம் அம்மையாரின் பெயரில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் அளிக்கப்படுவது பெண் விடுதலைக்கு அச்சாணி கல்வி மட்டுமே என்பதை உலகிற்கு பறைசாற்றும் நிகழ்வாகும்.
அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கக் கூடிய மாணவிகள் அனைவருக்கும் இந்த ஊக்கத்தொகை வழங்குதல் என்பது இந்த கல்வியாண்டிலேயே மிகப் பெரும் மாற்றத்தை கண்கூடாக ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டைவிடவும் பெண்கள் உயர்கல்வி சேர்க்கை 27 சதவீதம் அதிகமாகி இருக்கிறது என்பதும், இடைநிற்றலில் இருந்து மீண்டு 12,000 மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளனர் என்பதும் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார விடுதலையை நோக்கி தமிழ்ச்சமூகம் வீறுநடை போடத் தொடங்கிவிட்டது என்பதற்கான அடையாளம்.