

டைபாய்டு காய்ச்சல் குழந்தைகளிடையே அதிகம் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பொதுவாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிரினால் வைரஸ் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு தொடர்பான நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதுண்டு.
அதுவே பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் வரை தொற்று பரவல் அரிதாகவே காணப்படும். பிறகு மே மற்றும் ஜூன் மாதங்களில்தான் டைபாய்டு காய்ச்சல் தலைதூக்கும். ஆனால், இம்முறை பிப்ரவரி மாதத்திலேயே குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இடையே டைபாய்டு காய்ச்சல் அதிகமாகப் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
காய்ச்சல், இருமல், சளி, தொண்டைக்கட்டு, இடைவிடாத இருமலுடன் மருத்துவமனைக்கு வருகை தரும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
அதிலும் ஏற்கெனவே கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த சிறுவர்களுக்கு டைபாய்டு காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக காணப்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகும் மீண்டும் காய்ச்சலின் அறிகுறிகள் பலரிடம் தென்படுவதாகவும் கூறப்படுகிறது.
சுகாதாரமற்ற உணவு, பானம் அல்லது மாசுபட்ட குடிநீர் மூலம் பரவக் கூடியதே டைபாய்டு காய்ச்சல். பாதிக்கப்பட்டவரின் மலம் அல்லது சிறுநீர் மூலம், மற்றவர்களுக்கு அல்லது அவர் பயன்படுத்திய கழிவறையிலிருந்து மற்றவர்களுக்குத் தொற்று பாதிக்கும் அபாயம் இதில் உள்ளது. ஆகையால், சுகாதாரமான உணவு மற்றும் சுத்தமான குடிநீர் மட்டுமே அருந்துங்கள், வேறெதையும் தவறுதலாகக் கூட உண்ணாதீர் மாணவர்களே!