

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கணினி அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவிடம் (ஏஐசிடிஇ) புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்காலிக தீர்வு காண பிற பொறியியல் துறை ஆசிரியர்களுக்குக் கணினி அறிவியலில் குறுகிய கால பயிற்சி அளித்து அவர்களை இட்டுநிரப்பும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஏஐசிடிஇ வகுத்திருக்கும் நியமங்களின்படி கணினி துறையில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே அத்துறையில் கற்பிக்க முடியும். ஆனால், தற்போது கல்லூரி அளவில் 100 கணினி ஆசிரியர்கள் தேவைப்படும் இடத்தில் 70-க்கும் குறைவானவர்களே இருப்பதால் மாற்று ஏற்பாட்டுக்கான வழிகளை கல்லூரிகள் தேடிக் கொண்டிருக்கின்றன.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் பெருவாரியான மாணவர்களின் தேர்வாக கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை கொடிகட்டிப் பறக்கிறது. கணினி அறிவியலில் இளநிலை முடித்ததும் பன்னாட்டு ஐடி நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பும் உயரிய ஊதியமும் கிடைத்து வருவதால் தொடர்ச்சியாக லட்சக்கணக்கானோர் கணினி பட்டப்படிப்புகளை படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேவேளையில் இத்துறையில் ஆழ ஊன்றிப் படித்து முதுநிலை, முனைவர் பட்டம் பெற்று பேராசிரியர் ஆக கனவு காணுபவர்களுக்கு உரிய ஊதியம் பொறியியல் மற்றும் கலை அறிவியல் சுயநிதி கல்லூரிகளில் வழங்கப்படுவதில்லை. இதுவே தற்போது கணினி ஆசிரியர் பற்றாக்குறைக்கான அடிப்படை காரணம். கணினி வல்லுநர்களுக்கு இணையான ஊதியத்தை ஆசிரியர்களுக்கும் ஏஐசிடிஇ நிர்ணயிப்பதே தீர்வுக்கான வழி.